Ayodhya Verdict: அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

Supreme Court on Ayodhya Case Latest News: அயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News18 Tamil
Updated: November 8, 2019, 9:55 PM IST
Ayodhya Verdict: அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி
News18 Tamil
Updated: November 8, 2019, 9:55 PM IST
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை, கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் 17 ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பணிஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பாக அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 9 காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு நடவடிக்கைகள்:
இதையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மட்டுமின்றி பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்ட மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.கோவா மாநிலத்திலும் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Loading...

அயோத்தியில் மட்டும் சுமார் 12ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தியின் அருகே உள்ள 8 கல்லூரிகள் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் காவல்துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், காவல்துறையினருக்கு நவம்பர் 30ஆம் தேதி வரை விடுமுறை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 78 ரயில் நிலையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடவும் பைசாபாத் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காணொலி காட்சி மூலம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநில தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவேதி, டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்யை சந்தித்து பேசினர்.


First published: November 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...