ஆடையின் மேல் வழியே பாலியல் துன்புறுத்தல்- மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

ஆடையின் மேல் வழியே பாலியல் துன்புறுத்தல்- மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

உச்ச நீதிமன்றம்

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

  • Share this:
    சதீஷ் என்ற அந்த நபர் சம்பந்தப்பட்ட சிறுமியை நாக்பூரில் தன் வீட்டுக்கு அழைத்து சென்று சாப்பிட ஏதாவது தருகிறேன் என்ற பெயரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்கு எழுந்தது. ஆனால் அங்கு சதீஷ் சிறுமியின் மார்பைப் பிடித்து, அவரது ஆடையை அவிழ்க்க முயன்றுள்ளார்.ஆனால், ஆடையைக் களையாமல்தான் அவர் சிறுமியின் மார்பைப் பிடித்துள்ளார் என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறியிருப்பது விவாதப்பொருளாகியுள்ளது.

    அதாவது இருவரது சருமமும் நேரடித் தொடர்பில் இல்லை எனவே இது பாலியல் தாக்குதலாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி 3 ஆண்டுகள் தண்டனையை ஒரு ஆண்டாகக் குறைத்துள்ளார். அதாவது பெண்ணின் மானத்துக்கு களங்கம் கற்பிக்க முயன்றார் என்ற அளவில்தான் தண்டிக்க முடியும் என்பதே அதன் தீர்ப்பு.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.

    அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், “மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். போக்சோ சட்டத்தின் நோக்கமே பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோர்களைத் தண்டிக்கவே கொண்டுவரப்பட்டது. எதிர்காலத்தில் இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க முடியும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, பிறப்பித்த உத்தரவில், “மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்கிறோம். மகாராஷ்டிர அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். மேலும் தீர்ப்பை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் தரப்பில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்குகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: