இந்தியாவிற்கு எதிரான கருத்து, போலி செய்திகள் பரவல்: ட்விட்டர் நிறுவனம், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இந்தியாவிற்கு எதிரான கருத்து, போலி செய்திகள் பரவல்: ட்விட்டர் நிறுவனம், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ட்விட்டர்

ட்விட்டரில் நாட்டுக்கு எதிரான பதிவுகளை தடுக்க உரிய வழிமுறைகளை உருவாக்கக்கோரி பாஜகவின் வினீத் கோயன்கா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார் .

  • Share this:
 

இந்தியாவிற்கு எதிரான பதிவுகளை தடுக்கக் கோரிய வழக்கில் ட்விட்டர் நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீப காலமாக ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது ட்விட்டர். பொதுவாக சமூக வலைத்தளங்களில் தான் கருத்துக்களை பகிர்வார்கள். ஆனால் கருத்து பதிவிடும் தளமான ட்விட்டரே தற்போது சில சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவத்தின் போது அந்நாட்டின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகளை நீக்கி அதிரடி காட்டிய ட்விட்டர் நிறுவனம், தற்போது டெல்லியில் விவசாய போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருபவர்களின் கணக்குகளை முடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளது. மத்திய அரசு சுட்டிக்காட்டிய கணக்குகளை நீக்காவிட்டால் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும் ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து சுமார் 500 கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியிருப்பதாகவும், எஞ்சிய கணக்குகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நேற்று விளக்கமளித்தது.

இந்த நிலையில், ட்விட்டரில் நாட்டுக்கு எதிரான பதிவுகளை தடுக்க உரிய வழிமுறைகளை உருவாக்கக்கோரி பாஜகவின் வினீத் கோயன்கா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்
. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் விசாரணைக்கு வந்தபோது, உரிய விதிகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்தியாவிற்கு எதிரான கருத்துகள் அதிகளவில் இடம்பெறுகின்றன என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

போலியான செய்திகள், சமூக வலைதளங்களில் அதிகம் பரவும் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் படி ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் பேசுகையில், பெயரை குறிப்பிடாமலே ட்விட்டருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி யாரும் பொய் செய்திகளை பரப்பக் கூடாது. ட்விட்டர், ஃபேஸ்புக், லிங்கெடின், வாட்ஸ் அப் என யாராக இருந்தாலும் சரி, நீங்கள் இந்தியாவில் வேலை பாருங்கள். உங்களிடம் கோடிக்கணக்கான பின் தொடர்பவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் பணம் சம்பாதிக்கலாம், ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நீங்கள் பின்பற்றியே ஆக வேண்டும். மீறினால் சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கும், தவறான தகவல் பரப்புவதற்கும் இங்கு யாருக்கும் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
Published by:Arun
First published: