ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: சாட்சிகளை எப்படி பாதுகாக்கப் போகிறீர்கள்? - அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: சாட்சிகளை எப்படி பாதுகாக்கப் போகிறீர்கள்? - அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், சாட்சிகளை எப்படி பாதுகாக்கப் போகிறீர்கள் என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

  • Share this:
உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராசில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்றும், வழக்கை உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தர பிரதேச மாநில அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடைபெற வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரப்பட்டது. விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தர பிரதேச மாநில அரசு வலியுறுத்தியது.

Also read: வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் மோசமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும், அது நேர்மையான விசாரணையை முறியடிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது. காலை வரை பெண்ணின் உடலை வைத்திருந்தால் பெரிய அளவிலான வன்முறை நடைபெற வாய்ப்புள்ளது என்பதாலேயே, பெற்றோரை சமாதானம் செய்து நள்ளிரவில் உடல் எரியூட்டப்பட்டதாகவும் உத்தர பிரதேச அரசின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சிபிஐ விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மனுதாரர்களின் கோரிக்கைகளுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு வழக்கறிஞர் உதவி தேவைப்படுகிறதா, குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்க வகுத்துள்ள திட்டம் என்ன, அலகாபாத் நீதிமன்றத்தில் இதேவிவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பன தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தர பிரதேச மாநில அரசு மற்றும் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒருவாரம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Published by:Rizwan
First published: