69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு.

69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு.

உச்ச நீதிமன்றம்

தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை மராத்தா பிரிவினரின் அரசியல் சாசன மனுக்களோடு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

  • Share this:
இட ஒதுக்கீடு என்பது 50% அதிகமாக இருக்க கூடாது. ஆனால் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது இதனால் தகுதியுள்ள பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த இட ஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்,  இந்த வழக்கை மராத்தா இட ஒதுக்கீடு வழக்கோடு இணைத்து அரசியல் சாசன அமர்வில் விசாரிக்க வேண்டும் என தினேஷ் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தொடரப்பட்டது.

அந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், "கல்வி மற்றும் வேலைவாய்ப்யில்  பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தனி  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசுகள் பின்பற்றலாம். மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வேறுபடும். மாநில பட்டியல் படி  இடஒதுக்கீடு அளிப்பது என்பது அந்த  மாநில அரசுகளின் கொள்கை முடிவு. அதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை" என தெரிவித்தது.

இது தொடர்பாக தமிழக அரசு முன் வைத்த வாதத்தில், "கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு எவ்வாறு வழங்கப்பட்டது, உரிய  கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பியதோடு அது தொடர்பான புள்ளி விவரங்கள் சமர்பிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அம்பாசங்கர் ஆணையம் அமைத்து , வீடு வீடாக சென்று சாதி வாரி கணெக்கெடுப்பு நடத்தியதில் 87% மக்கள் பின்தங்கியிருந்தது அறியப்பட்டது தொடர்பான விவரங்கள் சமர்பிக்கப்பட்டது. நலிவடைந்த சமூகத்தினரை முன்னேற்றுவதற்காகவே கல்வி, வேலை வாய்ப்புகளில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பின்பற்றப்படும்  இடஒதுக்கீடு என்பது பிற மாநிலங்களில் இருப்பது போன்று கிடையாது, அவற்றுடன் ஒப்பிடவும் முடியாது." எனத் தெரிவித்தது.

ஆனால் இதற்கு மனுதாரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை மராத்தா பிரிவினரின் அரசியல் சாசன மனுக்களோடு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "ஓ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பான மகாராஷ்டிரா வழக்கு தற்போது அரசியல்சாசன அமர்வு விசாரணையில் உள்ளது. அவ்வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு தமிழக இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும். இதனால் இடைக்கால மனுக்கள் முடித்து வைக்கப் படுகிறது" என உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2012 ஆம் காயத்ரி என்பவர் தாக்கல் செய்த மூல மனு மட்டும் அடுத்த முறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
Published by:Vijay R
First published: