நீட் விவகாரத்தில், அதிமுக அரசு தாக்கல் செய்த 'ரிட்' மனுவை தமிழ் நாடு அரசு வாபஸ் பெற்றது. அதற்கு பதிலாக புதிய சூட் மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
நீட் விவகாரத்தில், அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வை கட்டாயமாக்கி கொண்டு வரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல்மருத்துவ கவுன்சில் சட்டங்களுக்கு எதிரானதாகும் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வால் பாதிப்படைவதாகவும் நீட் தேர்வை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கவும் அம்மனுவில் கோரியிருந்தது.
தமிழ் நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில், படித்தவர்கள் என்றும், நீட் தேர்வை ஒரு முறைக்கு மேல் எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், முதல் முறை நீட் எழுதும் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தது.
கல்வி என்பது அடிப்படை உரிமை என்ற ஒரே கோணத்தில் மட்டுமே அணுகி நீட் தேர்வு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க அதிமுக அரசு கோரிக்கை வைத்தது. எனவே நீர்த்துப் போன கோரிக்கைகள் அடங்கிய மனுவின் அடிப்படையில் நடைபெறும் வழக்கு விசாரணை சட்ட ரீதியில் நிலைக்காது எனக் கூறி திமுக அரசு புதிய சூட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
மாநிலங்களுக்கான அதிகாரம், சமத்துவம் மற்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு விதிகளுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளது என புதிய மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்வி மீதான மாநில அரசின் சுயாட்சிக்கு எதிராக உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வால் கிராமப்புறங்களில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது, அரசியல் சாசனம் கூறும் சமத்துவத்துக்கு எதிரானதாக உள்ளது, அரசியல் சாசனப்பிரிவு 14, 21 ஆகியவற்றை மீறியுள்ளது என திமுக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அரசுக் கல்லூரிகளில் நன்கொடையோ, கட்டண முறைகேடோ இல்லாத பட்சத்தில் அரசுக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு அறிவித்தது சரியான நடைமுறை அல்ல, என்றும் தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தில் நடத்தப்படும் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களால் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவித்து ரத்துசெய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று புதிய மனுவில் கோரப்பட்டுள்ளது. கூடுதலாக ஏ கே ராஜன் கமிட்டி அறிக்கையின் தரவுகள் மற்றும் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ள நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட விவரங்களும் புதிய மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.