ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சட்டப்பிரிவு கூறுவது என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன் முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட ஏழு பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஆளுநர் முடிவு எடுக்காமல் காலதாமதப்படுத்தியதற்கு முன்னமே உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசியல் சாசனப்பிரிவு 142 கீழ் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
சட்டப்பிரிவு 142 கூறுவது என்ன?
அரசியல் சாசனத்தின் 4வது அத்தியாயம் ஒன்றிய நீதித்துறை தொடர்பாக கூறுகிறது. இதில்தான் சட்டப்பிரிவு 142 வருகிறது. இந்த பிரிவின்படி, மாநில அல்லது மத்திய அரசோ சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து நடக்கவில்லை, அதன் உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், நீதிமன்றமே நேரடியாக உத்தரவை நிறைவேற்ற முடியும்.
மேலும் படிக்க: Breaking: பேரறிவாளன் விடுதலை.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பாணை அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும் நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்துரைக்கப்படும் முறையிலும், அவ்வாறு நாடாளுமன்றம் வகைசெய்யும் வரையில், குடியர்சுத் தலைவர் ஆணையின்வழி வகுத்துரைக்கும் முறையிலும், இந்திய ஆட்சி நிலவரை எங்கணும் செயலுறுத்தத் தகுவது என சட்டப்பிரிவு கூறுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.