Home /News /national /

மகாராஷ்டிரா அரசியல் - அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்க கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிரா அரசியல் - அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்க கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏகள் 38 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்களில்  16 பேரை தகுதி நீக்கம் செய்ய அம்மாநில துணை சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தொடங்கினார். துணை சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான மனு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரித்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வீடியோ கான்ஃப்ரன்சிங் வாயிலாக ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணையில் 38 எம்எல்ஏக்கள் தரப்பு தாங்கள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றதாகக் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மனு தாரர்களின் வாதத்தை விசாரித்த நீதிபதிகள் துணை சபாநாயகரின் தகுதி நீக்கம் நோட்டீஸ் தொடர்பாக 16 அதிருப்பதி எம்எல்ஏக்கள் பதில் அளிக்க ஜூலை 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. அதுவரை தகுதி நீக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் கிராமத்திற்கே தற்போது தான் மின்சார வசதி

    மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், இந்த கூட்டணி முறையற்ற ஒன்று எனக் கூறி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்த 38 எம்எல்ஏக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Shiv Sena, Uddhav Thackeray

    அடுத்த செய்தி