ஹோம் /நியூஸ் /இந்தியா /

தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வசூல்: பணம் வெள்ளையா கறுப்பா? நேரடி லஞ்சமா? அரசியல் அறம் என்ன?- SC-யில் நடந்த காரசார விவாதம்

தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வசூல்: பணம் வெள்ளையா கறுப்பா? நேரடி லஞ்சமா? அரசியல் அறம் என்ன?- SC-யில் நடந்த காரசார விவாதம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் குறிப்பாக பெரிய கட்சிகள் பெரிய அளவில் நன்கொடை என்ற பெயரில் நிதிதிரட்டி வருகின்றன. யார் நன்கொடை அளிக்கிறார்கள்? அந்தப் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதில் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையும் இல்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் குறிப்பாக பெரிய கட்சிகள் பெரிய அளவில் நன்கொடை என்ற பெயரில் நிதிதிரட்டி வருகின்றன. யார் நன்கொடை அளிக்கிறார்கள்? அந்தப் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதில் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையும் இல்லை.

இந்நிலையில்தான் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு குட்டு வைக்குமாறு கேள்வி எழுப்பும்போது, “உதாரணமாக, ஒரு அரசியல் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலிக்கும் நன்கொடையைக் கொண்டு ஒரு பெரிய போராட்டத்திற்கு நிதியுதவி அளிக்க முடியும் என்றாலோ, கலவரத்தை தூண்ட முடியும் என்றாலோ அந்தப் பணம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அரசுக் கட்டுப்பாடுகள் என்ன? அரசு உண்மையில் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

ஒரு கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடி நன்கொடை திரட்டுகிறது என்றால், இதை முழுதும் அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று எப்படி கூற முடியும்? பயங்கரவாதத்தைத் தூண்டினால்? நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது, ஆகவே அரசாங்கம் இது குறித்து கவனமேற்கொள்ள வேண்டும்.

பெரிய கட்சிகள் அல்லது தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை வசூல் வேட்டையில் ஈடுபடும் கட்சிகள் தங்கள் அரசியல் திட்டங்களுக்கு வெளியேயும் நிதியைப் பயன்படுத்த முடியும். தேர்தல் செலவினங்களோடு சேர்த்து ஒரு பெரிய வன்முறையான ஆர்ப்பாட்டத்தையே அரங்கேற்றலாமே?” என்று தலைமை நீதிபதி போப்டே சரமாரிக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி வசூலிக்க முடியும் என்று பதிலளித்தார்.

உச்ச நீதிமன்றம், இதற்கு, தாங்கள் அரசியல் பேச விரும்பவில்லை என்றும், எந்த ஒரு கட்சியையும் இலக்காக்கி இதைக்கேட்கவில்லை என்றும் கூறினார்.

ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு மேற்கொண்ட மனுவில்தான் இந்த விசாரணை விவாதங்கள் நடைபெற்றது. இதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரசாந்த் பூஷன், “எனவே ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 10 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வசூலிப்பை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றார்.

“தேர்தல் பத்திரங்கள் அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை, யார் அளிக்கிறார்கள், என்ன பயன் என்பதெல்லாம் பூடகமே.. அதனால் ஏப்ரலில் பத்திர விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு வேணுகோபால், ‘தேர்தல் ஆணையம் அனுமதி பெற்ற பிறகே விற்பனை தொடங்கியது” என்றார். தேர்தல் ஆணையமும் ரொக்கமாக நன்கொடை சென்ற காலத்தை விட தேர்தல் ஆணையம்தான் தேர்தல் பத்திரங்களை ஆதரிக்கிறது” என்றார்.

இதற்கு நீதிபதி போப்டே, “சரி! ஒரு தொழிலதிபர் எந்த ஒரு கட்சியின் தேர்தல் பத்திரங்களை வாங்கும் போதும் கொடுக்கும் நன்கொடை கறுப்பா, வெள்ளையா என்பதை வெளிப்படுத்துவாரா என்ன? அவர் வரி செலுத்த வேண்டுமா?

இதற்கு வேணுகோபால், ‘வாங்குபவர்கள் வெள்ளைப் பணத்தைத்தான் பயன்படுத்த முடியும். வங்கி டிராப்ட் மூலம்தான் பத்திரம் வாங்க முடியும். காசோலைகள், அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமே செய்ய முடியும்’ என்றார்.

இதற்கு பளீரென பதிலளித்த பிரசாந்த் பூஷன், “பத்திரங்களை முதலில் வாங்குபவர் வெள்ளை பணத்தில்தான் வாங்குவார். ஆனால் இவரிடமிருந்து இன்னொருவர் பத்திரங்களை வாங்கி அதை அரசியல் கட்சி அலுவலகத்தில் கொடுத்து விடுவார், இதற்கு ‘சலுகைகள்’ உண்டு. எனவே ஒரிஜினலாக வாங்குபவரிடமிருந்து யார் மீண்டும் வாங்குவார் என்பதன் அடையாளம் நமக்கு தெரியாது, ஒன்றும் தெரியாது” என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘அரசியல் அறம் பற்றி பேசுகிறீர்களா?’ என்று கேட்டார்.

அதற்குப் பிரசாந்த் பூஷன், ”இது அரசியல் ஒழுக்கம், நேர்மை சார்ந்தது மட்டுமல்ல, ஜனநாயக நெறிமுறைகள்தான் பிரச்னை. வெளிப்படைத்தன்மை என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.

இதனை அங்கீகரித்த தலைமை நீதிபதி போப்டே, “தேர்தலில் பணம் புழங்குவது பற்றி அனைவரும் அறிந்திருக்கின்றனர்” என்றார்.

முன்னதாக தலைமை நீதிபதி, தேர்தல் பத்திரங்கள் ஆளும் கட்சிக்கானது மட்டுமல்ல, மற்றக் கட்சிகளுக்கும்தானே என்றார்.

இதற்கு பிரசாந்த் பூஷன், ”இது லஞ்சம்தானே, ஏதோ ஒரு பயனை அடைய அளிக்கும் லஞ்சம். ஆளும் கட்சிதானே அரசை நிர்வகிக்கிறது” என்றார்.

இதற்கு பதில் அளித்த போப்டே, பிற மாநிலங்களில் பிற கட்சிகள்தான் ஆள்கின்றன, அவர்களும் தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்துகின்றனரே என்றார்.

அதற்கு பிரசாந்த் பூஷன், “மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை விவரங்கள் ஆளும் கட்சிக்குத் தெரிந்து விடும்” என்றார்.

உடனே நீதிபதி, “அப்போது, முழுதும் மறைக்கப்பட வேண்டும் என்கிறீர்களா?”என்று பூஷனை மடக்கினார்.

இதற்குப் பூஷண், “இல்லை இல்லை எனக்குத் தேவை முழு வெளிப்படைத்தன்மையே. தேர்தல் பத்திரங்கள் என்பது நேரடி லஞ்சமே. ஆளும் கட்சிகள் தங்களுக்கு செய்த சாதகப்பலன்களுக்காகவும் செய்யப்போகிற எதிர்காலப் பலன்களுக்காகவும் கட்சிக்கு கொடுக்கப்படும் லஞ்சம். ராஜ்ய சபாவில் அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் நிதி மசோதாவின் கீழ் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன” என்று ஒரு பிடிபிடித்தார் பூஷன்.

இதற்கு வேணுகோபால் பதில் என்ன என்று நீதிபதிகள் கேட்க, ‘இப்போது ஒவ்வொரு பணமும் கணக்கில் வந்தாக வேண்டும்’ என்றார், இதனையடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

First published:

Tags: Electoral bonds, Prashanth bushan, Supreme court, Supreme Court Cheif Justice