கர்நாடக மாநிலம் மங்களூருவில் சட்டம் பயின்ற அப்துல் நசீர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சுமார் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2003 ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அப்துல் நசீர், 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஓய்வுபெற்ற அப்துல் நசீர், பல்வேறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
குறிப்பாக அயோத்தியில் பாபர் மசூதி ராமர் கோயில் நிலப் பிரச்னை வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வில் அப்துல் நசீர் இடம்பெற்றிருந்தார். 5 நீதிபதிகளில் ஒரு இஸ்லாமிய நீதிபதியாக இருந்த அப்துல் நசீர் உள்பட அனைவரும், சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக இந்து அமைப்பிடம் வழங்க உத்தரவிட்டனர். இதேபோல முத்தலாக் வழக்கில், தனிநபர் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என அப்போதைய தலைமை நீதிபதி கேஹருடன் இணைந்து தீர்ப்பு அளித்திருந்தார். எனினும், மற்ற 3 நீதிபதிகள் முத்தலாக் சட்டவிரோதம் என தீர்ப்பு அளித்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்றிருந்த அப்துல் நசீர், மத்திய அரசின் நடவடிக்கை செல்லும் என தீர்ப்பு அளித்திருந்தார். ஆதார் தொடர்பான வழக்கில், தனிமனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு ஒருமனதாக கடந்த 2017-ல் தீர்ப்பு அளித்திருந்தது. அந்த அமர்வில் நீதிபதி அப்துல் நசீரும் இடம்பெற்றிருந்தார்.
இந்து கூட்டுக்குடும்ப சொத்தில், மகன்களைப் போன்று மகள்களுக்கும் சொத்தில் பங்குண்டு என 2020 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த 3 நீதிபதிகள் அமர்விலும் அப்துல் நசீர் இடம்பெற்றிருந்தார். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்ற வழக்கில், தேவையில்லை என அப்துல் நசீர் தீர்ப்பு அளித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.