ஹோம் /நியூஸ் /இந்தியா /

சேது சமுத்திர திட்டம்: மத்திய அரசுக்கு அவகாசம் கொடுத்த நீதிமன்றம்; தனித் தீர்மானமும் பாஜக ஆதரவும்… வரலாறு இதோ!

சேது சமுத்திர திட்டம்: மத்திய அரசுக்கு அவகாசம் கொடுத்த நீதிமன்றம்; தனித் தீர்மானமும் பாஜக ஆதரவும்… வரலாறு இதோ!

Ram Setu | 2004-ஆம் ஆண்டு மத்தியில் தி.மு.க கூட்டணியுடன் கூடிய காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது, 2005-ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு 2,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

Ram Setu | 2004-ஆம் ஆண்டு மத்தியில் தி.மு.க கூட்டணியுடன் கூடிய காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது, 2005-ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு 2,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

Ram Setu | 2004-ஆம் ஆண்டு மத்தியில் தி.மு.க கூட்டணியுடன் கூடிய காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது, 2005-ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு 2,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Chennai, India

சேது சமுத்திர பகுதியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பான முடிவை பிப்ரவரி முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்வதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை பிப்ரவரி 2ஆம் வாரத்திற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.

முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான சுப்ரமணியன் சுவாமி, இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதியே பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்வதாக கூறியிருந்தது, ஆனால் இதுவரை அதனை தாக்கல் செய்யவில்லை என கூறினார். அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக பரிசீலித்து வருவதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என நீதிபதிகளிடம் கோரினார். அந்த கோரிக்கையை ஏற்று வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 2ஆம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

மற்ற பல வழக்குகளைப் பொறுத்தவரை, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு நிலைப்பாட்டிலும், மத்திய அரசு வேறு நிலைப்பாட்டிலும் இருக்கும். ஆனால், சேது சமுத்திர விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு பலமுறை ஒன்றாக இருந்தபோதும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. இந்த திட்டத்தைப் பொறுத்தவரை சுப்ரமணியன் சுவாமி முக்கிய எதிர்தாரராக இருந்து வருகிறார். நாட்டின் கடைக்கோடிப் பகுதியான ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே அமைந்துள்ள பகுதிதான் ராமர் பாலம் என்று அழைக்கப்படுகிறது. 48 கிலோ மீட்டம் நீளம் கொண்ட இந்தப் பாலம் சுண்ணாம்புக் கற்களால் ஆனது. ராமாயணத்தை நம்புபவர்கள் இதனைப் புராணக் கண்ணோட்டத்துடன் அணுகுகின்றனர்.

ராவணனால் கடத்தப்பட்ட சீதையைக் காப்பாற்ற ராமன் இலங்கை செல்வதற்காக உருவாக்கப்பட்ட பாலம்தான் ராமர் பாலம் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. அதனால், தீவிரமாக இந்து நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் இதனை புனிதப் பகுதியாக கருதுகின்றனர். வால்மீகி எழுதிய ராமாயணத்திலும் ராமர் பாலம் குறித்த விவரங்களும் உள்ளன என்று கூறப்படுகிறது. பாக் ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ராமர் பாலம் என சொல்ல கூடிய பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாய்தான் ‘சேது சமுத்திர கால்வாய்’ ஆகும். இதுவரையிலும் பாக் ஜலசந்தியிலிருந்து மன்னார் வளைகுடா, இந்திய பெருங்கடலில் செல்லும் கப்பல்கள், இலங்கையை சுற்றிதான் சென்று வருகிறது. அவ்வாறு சுற்றி செல்லாமல் குறுக்கு வழியில் சென்று வங்கக்கடலை அடைய செய்யும் திட்டமே சேது சமுத்திர கால்வாய் திட்டம்.

தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்:

2004-ஆம் ஆண்டு மத்தியில் தி.மு.க கூட்டணியுடன் கூடிய காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது, 2005-ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு 2,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 2006-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, அ.தி.மு.க சார்பில் இந்தத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தார். பின்னர், 2008-ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

பின்னர், 2011-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சேது சமுத்திரத் திட்டக்கு தமிழக அரசின் சார்பாக எதிர்ப்பு தெரிவித்தார். சூழலியல் ரீதியாகவும் இந்தத் திட்டம் பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வாதிட்டார். கருணாநிதி தரப்பில் பொருளாதார ரீதியாக தமிழகத்துக்கு பெரும் நன்மை பயக்கும் திட்டம் என்று வாதிட்டார். இந்தத் திட்டத்துக்காக பேசும்போது, ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கேள்வி எழுப்பினார். இது தேசிய அளவில் பெரும் பேசுபொருளானது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் ராமர் சேது சமுத்திரத் திட்டம் என்று கூட பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

மேலும், சேது சமுத்திரத் திட்டத்துக்கான முக்கிய எதிர்ப்பு மத நம்பிக்கையாளர்களிடம் இருந்துதான் பெரிய அளவில் வந்தன. ஆனால், அது மட்டுமே எதிர்ப்பு அல்ல. சேது சமுத்திரத் திட்டத்துக்கு ராமேஸ்வரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல, சூழலியல் ஆர்வலர்கள் தரப்பில் மன்னார் வளைகுடா பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்கோளக் காப்பகமாகவும் கடல்சார் தேசிய பூங்காவும் அறிவிக்கப்பட்ட பகுதி. இங்கு மீன்பிடிக்கக் கூட அனுமதி கிடையாது. ஏராளமான தனித்துவம் வாய்ந்த கடல் உயிரினங்கள் இந்தப் பகுதியில் வாழ்வதால் இந்தத் திட்டத்தால் பல்லுயிர் சூழல் பாதிக்கப்படும் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆகவே, சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. குறிப்பாக, தற்போதைய பா.ஜ.க எம்.பியான சுப்ரமணியன் சுவாமி முதலில் வழக்குத் தொடர்ந்தார். சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ஆறாவது கடல் பாதையில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். அதனால், அந்தப் பாதையில் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று 2007-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை முன்னிருத்தி ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனையடுத்து, ஆறாவது வழித் தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர், மாற்றுப் பாதையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.

அதன்பிறகு, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி சில மாதங்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக விரைவில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக பரிசீலித்து வருவதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரினார். கோரிக்கையை ஏற்று வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 2ஆம் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பின்னர், இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது என்றார். அதன் தொடர்ச்சியாக, சேது சமுத்திர திட்டத்ததை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி அரசின் தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அப்போது பாஜக சார்பில் பேசிய நயினார் நாகேந்திரன், தெய்வமாக வழிபடும் ராமர் கால் தடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால், ராமர், ராமாயணத்தை பற்றி சிலர் பேசுகிறார்கள்; அதனை எதிர்க்கக் கூடாது; தெய்வ நம்பிக்கை என பேசுவது எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார். இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது, தெய்வ வழிபாட்டை குறை சொல்வதைக் கேட்க முடியாது. அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மதத்தைப் பற்றியோ தெய்வத்தையோ குறை சொல்லி யாரும் பேசவில்லை. தெய்வங்கள் பெயரை சொல்லி சில திட்டத்தை தடை செய்ததாக பேசினார்கள் என்றார்.

First published:

Tags: BJP, MK Stalin, Subramanian Swamy, Supreme court