திஷா ரவி கைது ‘அராஜகம்’- டி.எம்.கிருஷ்ணா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கண்டனம்

திஷா ரவி கைது ‘அராஜகம்’- டி.எம்.கிருஷ்ணா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கண்டனம்

திஷா ரவி கைது

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி, பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில், கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை திருத்தி வெளியிட்ட கல்லூரி மாணவியை டெல்லி சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

  • Share this:
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி, பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில், கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை திருத்தி வெளியிட்ட கல்லூரி மாணவியை டெல்லி சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தக் கைது நடவடிக்கையை அராஜகம் என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்களும் பிரபலங்களும் பொங்கியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில், “முற்றிலும் அராஜகம்! இது விரும்பத்தகாத துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல். திஷா ரவிக்கு என் முழு ஆதரவு” என்று பதிவிட்டுள்ளார்.

கர்நாடக சங்கீத பாடகர் டி.எம்.கிருஷ்ணா, “சமூக ஊடக டூல் கிட்டை ஷேர் செய்ததற்காக 21 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரை கைது செய்து விட்டோம் என்பது நாம் போலீஸ் ஸ்டேட்டாக சரிந்து விட்டோம் என்பதற்கான அறிகுறியல்ல. எனக்கு ஒன்றும் புரியவில்லை. கைது மூலம் நாட்டின் இளைய சமுதாயத்தையே அச்சுறுத்தலாம் என்பதே நோக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பலரும், கூகுள் ஆவணத்தில் 2 வரிகளை திருத்தியதற்காக அவர் மீது கிரிமினல் சதி வழக்கு பாய்ந்துள்ளது. பெற்றோர்களும், குடிமக்களும் எச்சரிக்கையாக இருங்கள் நாட்கள் இருண்டு கொண்டே வருகின்றன. இந்திய அரசு இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று ட்வீட் செய்து மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தவிர இளையோர் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சேர்ந்து கண்டனம் வெளியிட்டுள்ளனர். அதில், “தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரையும் விரோதிகளாக அரசு பார்க்க வேண்டிய அவசியமில்லை, மாறாக வாக்களித்து பதவியில் உட்கார வைத்த மக்களுடன் இணைந்து பணியாற்றக் கற்றுக் கொள்ளட்டும். ’பன்னாட்டுச் சதி’, நாட்டின் புகழுக்கு பங்கம், இந்தியாவுக்கு எதிராக பண்பாட்டு, பொருளாதாரப் போர், போன்ற வார்த்தைகளையும் கூற்றுக்களை அதிகாரத்தில் பீடத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தக் கூடாது. இந்த வார்த்தைகள் மூலம் இளம் ஆர்வலர்களை வர்ணிப்பது சரியாகாது” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் நீதிக்கான கூட்டணி அமைப்பும் திஷா ரவி கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்துவதற்கான மத்திய அரசின் சமீபத்திய முயற்சிகளுள் திஷா கைதும் ஒன்று. உத்தரகண்டின் சமீபத்திய வெள்ளம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றை கவனித்து நடவடிக்கை எடுக்க நாட்டின் இளைஞர்களுடன் ஒன்றிணைந்து மத்திய அரசு பணியாற்ற வேண்டுமே தவிர அவர்களைத் தாக்கக் கூடாது என்று தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. மேலும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

அத்துடன், ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published: