'சூப்பர் 30' என்ற இந்திய கணிதவியலாளர் ஆனந்த்குமாரின் திட்டத்தை பற்றி கனடாவின் எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார். தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான இந்த "எழுச்சியூட்டும் பணி" கல்விக்கு வெற்றிகரமான பாதையை உருவாக்கும் ஒரு முன்மாதிரி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மேப்பிள் ரிட்ஜ் மற்றும் பிட் மெடோஸின் பாராளுமன்ற உறுப்பினர் மார்க் டால்டன், கனேடிய பாராளுமன்றத்தில் தனது ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டத்தில் கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்ட கல்வித் திட்டங்கள் குறித்த கணக்கை வெளியிட்டார்.
அப்போது “ஏழை எளிய மாணவர்களுக்கு உதவுவதில் 'சூப்பர் 30' என்ற திட்டம் உண்மையில் ஊக்கமளிக்கும் என்றும் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் இந்தியாவின் உயரிய நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்பினை இந்த திட்டம் ஏற்படுத்திதருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேப்பிள் ரிட்ஜில் வசிக்கும் பிஜு மேத்யூ, பீகாரில் பிறந்த கணிதவியலாளர் குமார் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார், இது கல்வியாளர்களுக்கு ஒரு சிறந்த ஊக்கமளிக்கும் வாசிப்பு என்றும் அந்த புத்தகத்தை படிக்குமாறு டால்டன் மக்களை கேட்டுக்கொண்டார்.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த, 37 வயதானவர் ஆனந்த் குமார். கணித ஆசிரியரான இவர், 2002-ஆம் ஆண்டு முதல் ’சூப்பர் 30’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம், பீகாரில் உள்ள மிகவும் ஏழை மாணவர்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்தி வெற்றி பெற வைப்பது மட்டுமல்லாமல் ஒரு வருடத்துக்கான அவர்களின் செலவையும் அவரே ஏற்றுகொள்கிறார்.
கனடாவில் 2012ம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் குமார் பாராட்டப்பட்டார். பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கத்தின் அப்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் நவோமி யமமோட்டோ, குமாரை ஒரு 'திறமையான' ஆசிரியர் என்று பாராட்டினார். குமாரின் வாழ்க்கை கதையே 'சூப்பர் 30' என்ற பெயரில் படமாகி உள்ளது. இதில் ஆனந்த் குமார் வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். மிருணாள் தாக்கூர், விரேந்திர சக்சேனா, நித்ஷ் சிங் ஆகியோரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். படத்தை விகாஸ் பால் இயக்கி உள்ளார். இவர் குயின் படத்தை எடுத்து பிரபலமானவர்.
இந்த படத்துக்கு வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்தை சொல்லி இருப்பதால் ‘சூப்பர் 30’ படத்துக்கு பீகார் மாநில அரசு வரிவிலக்கையும் அளித்துள்ளது. JEE போன்ற தேர்வுகளை உயர்சாதி அல்லது பணக்கார மாணவர்கள் மட்டும் எழுத முடியும் என்ற நிலை இப்போதும் பலரின் மத்தியில் உள்ளது. ஆனால் குமார் போன்ற நல் உள்ளங்களால் அந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இது உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும். பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இந்த திட்டத்தை உயிர்ப்புடன் நடத்திவரும் குமாருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் தங்களால் முடிந்த உதவிகளையும் குமாருக்கு அளித்து வருகின்றனர்.