'ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு' என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ கான்பரன்சிங் மாநாட்டை ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டில் இந்தியா சார்பாக பங்கேற்று பிரதமர்
மோடி பேசியதாவது-
ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். ஜனநாயக உணர்வு எங்களின் நாகரிக நெறிமுறைகளில் ஒருங்கிணைந்ததாகும். லிச்சாவி, சாக்யா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அரசுகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மலர்ந்துள்ளன. இதே ஜனநாயக உணர்வை 10-ம் நூற்றாண்டின் "உத்தரமேரூர்" கல்வெட்டில் காண்கிறோம்.
ஜனநாயக உணர்வும், நெறிமுறைகளும் பண்டைக்கால இந்தியாவை மிகவும் வளமான நாடுகளில் ஒன்றாக மாற்றியிருந்தது. பல நூற்றாண்டுகால காலனி ஆட்சியால் இந்திய மக்களின் ஜனநாயக உணர்வுகளை நசுக்க முடியவில்லை.
அனைத்துத் துறைகளிலும் முன்னெப்போதும் இல்லாத சமூக- பொருளாதார முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் நிலை உலகுக்கு, 'ஜனநாயகம் பயன்தர முடியும், ஜனநாயகம் பயன்தந்துள்ளது, ஜனநாயகம் தொடர்ந்து பயன் அளிக்கும்' என்ற ஒரு தெளிவான செய்தியைத் தருகிறது.
பல கட்சிகள் பங்கேற்கும் தேர்தல்கள், சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் போன்ற கட்டமைப்பு அம்சங்கள் ஜனநாயகத்தின் முக்கியமான தகுதிகளாக இருக்கின்றன. இருப்பினும் ஜனநாயகத்தின் அடிப்படை பலம் அதன் உணர்விலும், நெறிமுறைகளிலும் உள்ளது. இவை நமது குடிமக்களிடமும், நமது சமூகங்களிலும் உறைந்திருக்கிறது. ஜனநாயகம் என்பது மக்கள், மக்களால், மக்களுக்காக என்பது மட்டுமின்றி, மக்களுடன், மக்களுக்குள் என்பதாகவும் இருக்கிறது.
Also Read :
17 சுற்று குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் தகனம்!
உலகின் பல்வேறு பகுதிகள் ஜனநாயக வளர்ச்சியின் பல்வேறு பாதைகளைப் பின்பற்றுகின்றன. ஒவ்வொன்றிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். நமது ஜனநாயக நடைமுறைகளையும், செயல்முறைகளையும் நாம் அனைவரும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவது, நவீன டிஜிட்டல் தீர்வுகள் மூலம் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்துவது ஆகியவற்றில் இந்தியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
சமூக ஊடகம், க்ரிப்டோ கரன்சி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய விதிமுறைகளை நாம் இணைந்து உருவாக்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்தை சீரழிக்காமல் வலுப்படுத்த உதவும்.
Also Read :
டான்சானியாவிலிருந்து திரும்பிய சென்னையை பூர்வீகமாக கொண்டவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு...
ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம் நமது குடிமக்களின் பெருவிருப்பங்களை ஜனநாயகங்கள் நிறைவேற்ற முடியும். மனிதகுலத்தின் ஜனநாயக உணர்வைக் கொண்டாட முடியும். இந்த மதிப்புமிகு முயற்சியில் சக ஜனநாயகங்களுடன் (நாடுகளுடன்)இணைந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.