HOME»NEWS»NATIONAL»sudden turnaround in cbi possession of 104 kg gold case who put the fake key crime video vai

சிபிஐ வசமிருந்த 104 கிலோ தங்கம் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்..  கள்ளச்சாவி போட்டது யார்?

சிபிஐ வசமிருந்த 400 கிலோ தங்கத்தில் 104 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த லாக்கரை கள்ளச்சாவி போட்டுத் திறந்து தங்கம் திருடப்பட்டதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கள்ளச்சாவி போட்டு தங்கத்தை திருடியது யார்?

  • Share this:



சுரானா நிறுவனத்தில் சிபிஐயால் சீல் வைக்கப்பட்ட லாக்கர் திறக்கப்பட்டு 104 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர், கொள்ளை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

கடந்த 2012ம் ஆண்டு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து சென்னையின் சில நகைக் கடைகள் தங்கத்தை இறக்குமதி செய்வதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.



வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கணக்கில் வராத 400 கிலோ தங்கம் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ 47 கிராம் தங்கம் சுரானா நிறுவனத்திலேயே உள்ள லாக்கரில் சீல் வைக்கப்பட்டது. லாக்கர்களின் 72 சாவிகள் மற்றும் தங்கத்திற்கான ஆவணப் பட்டியலை சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதற்கிடையில், சுரானா நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்டர்டு ஆகிய வங்கிகளிடம் பெற்ற 1160 கோடி ரூபாயை ஈடுகட்ட தங்கத்தை உரிமை கோரியிருந்தது. இதற்கு ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103 கிலோ 864 கிராம் தங்கத்தை காணவில்லை. இதையடுத்து, மாயமான தங்கத்தை சிபிஐ ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க...ஆருத்ரா திருவிழாவில் தகராறு சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்கு(வீடியோ)

இந்த மனுவை கடந்த 12 ம் தேதி விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கு தங்கம் காணாமல் போய் உள்ளது என்றார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ கிராம் தங்கம் மாயமாகி இருப்பது சிபிஐ மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து, எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி கண்காணிப்பாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் காணாமல் போன தங்கம் குறித்து சிபிஐமீது திருட்டு வழக்கு பதிந்து உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. வழக்கு குறித்த ஆவணங்களை சிபிஐ போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை சுரானா கார்ப்பரேஷன் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

சுரானா அலுவலகத்தின் 2வது மாடியில் தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரின் சீல் உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு தங்கம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். சீலை உடைத்து தங்கத்தை எடுத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர் சிபிசிஐடி போலீசார்.







உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: