நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தவர்களை கைதுசெய்யக் கோரி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து நாடு தழுவிய அளவில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசத்தில் போலீஸார் மீது கற்களை வீசி மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகி நவீன் ஜிந்தால் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்களது பேச்சுக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் டெல்லி ஜமா மஸ்ஜித் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
பாஜக தலைவர் நுபுர் சர்மா-வின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூரில் ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதேபோல, நவி மும்பையில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சர்கஸ் பூங்காவில் குவிந்த இஸ்லாமியர்கள், நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியிலும் மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றது
பிரயாக்ராஜின் அடாலா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறை கூடுதல் இயக்குநரின் வாகனம் சேதமடைந்தது.
இதேபோல, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மெக்கா மசூதிக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.