இந்தியாவில் 22 நாட்களில் முதல் முறையாக அதிகரித்த கொரோனா பாதிப்பு!

கொரோனா

2 கோடி மக்கள் தொகை கொண்ட மும்பை நகரில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு இன்று ஒரே நாளில் 873 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

  • Share this:
ஓராண்டாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு இந்தியாவில் கட்டுக்குள் வந்து தற்போது தான் குறையத் தொடங்கியதாக நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது மீண்டும் தனது கைவரிசையை காட்டி வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1,09,77,387 ஆக அதிகரித்துள்ளது. இதே போல கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 101 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலியானவர்கள் எண்ணிக்கை 1,56,212 ஆக உயர்ந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் இறப்போர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களே. கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் மகாராஷ்டிராவில் இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் வந்தது. ஆனால் பிப்ரவரி 5ம் தேதிக்கு பிறகு அங்கு பாஸிட்டிவிட்டி ரேட் அதிகரித்தது. இதன் காரணமாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000 என்ற அளவை கடந்துள்ளது.

2 கோடி மக்கள் தொகை கொண்ட மும்பை நகரில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு இன்று ஒரே நாளில் 873 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த வியாழன் அன்று மும்பை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை பராமரிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மகாராஷ்டிராவில் கடந்த ஒரு மாதத்திற்குள் 7 அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீர் என அதிகரித்திருப்பதாக தெரியவந்தது. கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது.
Published by:Arun
First published: