5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில் பிரசாரம், பேரணி நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரணி, பிரச்சார கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த தடையை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஐந்து மாநிலங்களுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வாக்குப் பதிவு நிறைவடையவுள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், கோவா ஆகிய 2 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க :
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக , பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணிகள், நேரடிப் பிரசாரங்கள் போன்றவற்றை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்வதற்கான தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி மைதானத்தில் 30% பார்வையாளர்களுடன் கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.