ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரி கடல் வழியாக இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயற்சியா?

புதுச்சேரி கடல் வழியாக இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயற்சியா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய குடியுரிமைச் சட்டத்தில், இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், புதுச்சேரி கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தமிழ் அகதிகள் செல்ல முயல்வதாக தகவல் பரவியுள்ளது.

  இந்த தகவலைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் பகுதி காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதை கண்காணிக்க கடலோர மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

  கடலோரப் பகுதிகளில் கடல் மார்க்கத்திலும் சந்தேகப்படும் ஆன வகையில் யாராவது இருந்தால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழர்கள் ஒரு குழுவாக தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும், பகல் மற்றும் இரவு வேளைகளில் கடலோர பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.. தங்கும் விடுதி மற்றும் வாகன சோதனையை காவல்துறையினர் ஈடுபட வேண்டுமென புதுச்சேரி கடலோர காவல்படை சார்பில் அனைத்து பிரிவு போலீசாருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

  இக்கண்காணிப்பு நடவடிக்கை புதுச்சேரியின் பனித்திட்டு, நரம்பை, புதுக்குப்பம், நல்லவாடு, வீராம்பட்டினம், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

  தமிழகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் சுமார் 70 ஆயிரம் ஈழத்தமிழர்களும் முகாம்களுக்கு வெளியே சுமார் 30 ஆயிரம் ஈழத்தமிழர்களும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

  ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் நிலையான வாழ்வை வாழலாம் என்ற எண்ணத்தில் கடந்த காலங்களில் படகு வழியாக செல்ல முயன்றுள்ளனர்.

  இவ்வாறான முயற்சியை ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய ஆஸ்திரேலிய அரசு, கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் அடிப்படையில், சட்டவிரோதமாக வந்த பல வெளிநாட்டு தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது.

  இந்த கொள்கையின் நீட்சியாக ஆட்கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகளில் பல நாடுகளைச் சேர்ந்த 614 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் மற்றும் இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Srilankan Refugees