இலங்கையில் மகிந்தா, கோத்தபய ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இரக்கம் காட்டக்கூடாது என்றும் லிபியாவாக இலங்கை மாற நாம் அனுமதிக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனினும், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி போராட்டம் தொடர்கிறது. ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
ராஜபக்சே சகோதரர்களுக்கு சொந்தமான பூர்வீக வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது. தற்போது திரிகோனமலை ராணுவ முகாமில் ராஜபக்சே உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இலங்கை சூழல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்தியா தனது ராணுவத்தை கண்டிப்பாக அனுப்ப வேண்டும். தற்போது, மக்களின் கோபத்தை இந்திய எதிர்ப்பு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: ராஜபக்சே தந்தை சிலையை உடைத்த போராட்டக்காரர்கள்
மற்றொரு ட்விட்டில், பிரதமரின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது. எம்.பி.க்கள் கும்பலால் சுட்டுக் கொலப்பட்டு உள்ளனர். அதற்குக் காரணமானவர்கள் இரக்கம் காட்ட தகுதியானவர்கள் அல்ல. நமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.