கர்நாடகாவைத் தொடர்ந்து பாஜக வசம் செல்லும் மத்தியப் பிரதேசம்.. ஏன்?

கர்நாடகாவை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி செய்துகொண்டிருந்த இன்னொரு மாநிலம் பாஜக வசம் செல்கிறது.

கர்நாடகாவைத் தொடர்ந்து பாஜக வசம் செல்லும் மத்தியப் பிரதேசம்.. ஏன்?
கமல்நாத், சிந்தியா (வலப்பக்கம்)
  • Share this:
கர்நாடகாவை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி செய்துகொண்டிருந்த மத்திய பிரதேச மாநிலம் பாஜக வசம் செல்கிறது.

பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்திய பிரதேசத்தில், அக்கட்சியின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரியணை ஏறியது. ஆனால், உட்கட்சி பிரச்சனையால் இந்த ஒன்றரை ஆண்டுகளையும் நிம்மதியின்றியே கழித்தார் அந்த மாநில முதலமைச்சர் கமல்நாத். முதலமைச்சர் வேட்பாளர் யாரென்று அறிவிக்காமலேயே தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், மாநிலத் தலைவராக கமல்நாத்தை அறிவித்தது. அப்போது தொடங்கியதுதான் இந்த பிரச்சனை.

கமல்நாத்தின் ஆதரவாளர்களும் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். முதலமைச்சர் கமல்நாத், முதலமைச்சர் சிந்தியா என்ற ஹேஷ்டேகுகளை, இருவரின் ஆதரவாளர்களும் ட்ரெண்ட் செய்தனர். உட்கட்சி மோதலுக்கு இடையே சட்டமன்றத் தேர்தலில் ஒரு வழியாக, பாஜகவை விட அதிக இடங்களைப் பிடித்து வெற்றி பெற்று சில சுயேச்சைகளுடனும் இதர கட்சி ஆதரவுடனும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.


மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது, அக்கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி, விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்பதும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதும்தான். இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினார் சிந்தியா. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவேன் என்றும் கமல்நாத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். சிந்தியாவின் இந்த அறிவிப்பு ஏற்கெனவே புகைந்துகொண்டிருந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது. வீதிகளில் வந்து சிந்தியா போராட்டம் நடத்தினால் எதிர்கொள்ளத் தயார் என்று முதலமைச்சர் கமல்நாத்தும் எதிர் சவால் விடுத்தார்.

இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான திக்விஜய் சிங்கின் தலையீடும் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது பெரும் மோதலை ஏற்படுத்தி வந்தது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து கமல்நாத்தை நீக்கிவிட்டு முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என்பது சிந்தியாவின் முக்கியமான கோரிக்கைகளுள் ஒன்று. உட்கட்சி பூசல் காரணமாக, தலைவர் தேர்வை தள்ளி போட்டுக்கொண்டே வந்தது காங்கிரஸ் மேலிடம். இந்த நடவடிக்கையும் சிந்தியா தரப்புக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக சிந்தியா தனது கருத்துக்களை முன்வைத்தது, காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிந்தியாவுக்கு மேலும் அதிருப்தியை அளித்திருப்பது, மாநிலங்களவைத் தேர்தல். மார்ச் 23-ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் 3 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் ஒரு இடம் உறுதியான நிலையில் மற்றொரு இடத்திற்குக் கடுமையான போட்டி நிலவுகிறது. காங்கிரஸுக்கு உறுதியாகியுள்ள ஒரு இடத்தில் போட்டியிட தற்போது எம்பியாக உள்ள திக்விஜய் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த ஒரு இடத்தை சிந்தியா தனக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற யாருக்கும் மாநிலங்களவை சீட் தரப்பபோவதில்லை என காங்கிரஸ் கூறிவிட்டதால் தனது அதிரடி முடிவை அறிவித்துவிட்டார் சிந்தியா.Also see:
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading