``சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படும்’’ என்று கேரள மாநில சுற்றுலாத் துறை செயலாளர் கமலவர்தன் ராவ் தெரிவித்துள்ளார்.
கமலவர்த்தன் ராவ் தலைமையில் கேரள அறநிலையத் துறை ஆணையர் ஜோதிராவ், கேரள கூடுதல் டிஜிபி அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று திருப்பதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கமலவர்தன் ராவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு செய்து கொடுக்கும் ஏற்பாடுகள், வசதிகள் ஆகியவை பற்றி தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது பம்பாவில் இருக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது என்று தகவல் வெளியானது. ஆனால் பாலம் சேதமடைந்ததே தவிர, அடித்துச் செல்லப்படவில்லை. பம்பாவில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், பக்தர்கள் குளிக்கும் இடங்கள் ஆகியவை வெள்ளத்தில் சேதம் அடைந்துவிட்டன.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பாவில் தற்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே கேரள உயர் நீதிமன்ற அனுமதியுடன் பம்பாவில் இருந்து 23 கி.மீ. தொலைவில் இருக்கும் நிலக்கல் என்ற இடத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு தேவையான கட்டுமானங்களை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். மேலும், பம்பாவில் இருக்கும் கடைகளை முழுவதுமாக நிலக்கல்லுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியாக கியூ வசதியை ஏற்படுத்துவது, கழிவறைகள் கட்டுவது உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிலக்கல் முதல் பம்பா வரை தற்போது 200 பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு முதல் பேட்டரியால் இயங்கும் 10 பேருந்துகளை பம்பாவில் இருந்து நிலக்கல்லுக்கு இயக்க திட்டமிட்டு இருக்கிறோம். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றார் கமலவர்தன் ராவ்.
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.