கொரோனா 2ஆவது அலை : ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கோப்பு படம்

தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலையால் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் ரயில் பயணத்தின்போது கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலையால் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் ரயில் பயணத்தின்போது கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா 2ஆவது அலை கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் சவாலாக இருந்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்களில் பாதுகாப்பான பயணத்திற்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளை கேட்டுக்கொள்கிறது.

  அந்த வகையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கை சுகாதாரம் போன்ற அடிப்படை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். தேவையற்ற பயணம் மற்றும் குழுக்களாக பயணம் செய்வதை தவிர்க்கவும்.

  டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் தளங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணத்தை பயணிகள் தவிர்க்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுக்காக காத்திருப்பவரானால் அல்லது தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் அல்லது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பயணத்தை தவிர்க்கவும்.

  கொரோனா பரவலை தடுக்க கை சுத்திகரிக்கும் கிருமி நாசினிகள், உணவு, நீர் போன்றவற்றை பயணத்தின் போது பயணிகள் எடுத்துச்செல்ல வேண்டும். பயணிகள் அனைவரும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பயணத்தின்போது பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.

  Must Read : கொரோனா தொற்று அதிகரிக்க 2 முக்கிய காரணங்கள் : எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா விளக்கம்

   

  வெளி மாநிலங்களில் இருந்து தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரும் பயணிகள் இ-பாஸ், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற நெறிமுறைகளை பயணத்தின்போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

  கொரோனா பரவலைத் தடுக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: