மேற்குவங்க தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ஜி23 தலைவர்களுக்கு இடமளிக்காத காங்கிரஸ்!

காங்கிரஸ்

இடம்பிடித்துள்ளது. இடதுசாரி கூட்டணியில் ISF கட்சி இடம்பெற்றிருப்பதால் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் அக்கட்சியின் எம்.பி ஆனந்த் சர்மா ஆகியோருக்கு இடையே வார்த்தைப் போரை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அங்கம் வகிக்கும் மேற்குவங்க தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் காங்கிரஸின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் ஜி23 என்றழைக்கப்படும் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சேர்க்கப்படவில்லை.

மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் மார்ச் 27ம் தேதி முதல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனிடையே இத்தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் தேவை என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல் , ஆனந்த் சர்மா, பூபேந்திர சிங் ஹூடா, மனீஷ் திவாரி உள்ளிட்ட ஜி 23 தலைவர்களில் ஒருவரின் பெயரும் இடம்பெறவில்லை.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மக்களவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீன், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சல்மான் குர்ஷித், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் கிரிக்கெட்டர் நவ்ஜோத் சிங் சித்து, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜிதின் பிரசாதா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பிடித்துள்ளது. இதே கூட்டணியில் இஸ்லாமிய மதத் தலைவர் அப்பாஸ் சித்திகியின் ISF கட்சியும் இடம்பிடித்துள்ளது. ISF கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் அக்கட்சியின் எம்.பி ஆனந்த் சர்மா ஆகியோருக்கு இடையே வார்த்தைப் போரை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: