சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து முறைப்படி இன்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட சுமார் 15 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து மாநாட்டில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் எதிர்கொள்வோம் என்றார். சேவை, போராட்டம், தியாகம், இந்தியா முதலில் ஆகியவையே கட்சியின் புதிய முழக்கம் என்றும் தெரிவித்தார். பாஜகவை வீழ்த்த ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறிய கார்கே, காங்கிரசார் அனைவரும் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய சோனியா காந்தி, இது நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சோதனையான காலம் என்று கவலை தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக - ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருவதாக சாடினார்.
மன்மோகன் சிங் தலைமையில் 2004 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் பெற்ற வெற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்ததாக சோனியா காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமைந்த தேச ஒற்றுமை யாத்திரையுடன் தனது அரசியல் பயணம் நிறைவடைவதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார்.
சோனியா காந்தி சமீப காலமாக தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். அரிதினும் அரிதாகவே காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். தற்போது தேச ஒற்றுமை யாத்திரை முடிந்தவுடன் தன்னுடைய பயணமும் முடிவடைந்துவிட்டதாக கூறியுள்ளது, அரசியலில் இருந்து அவர் முழுமையாக விலகவுள்ளதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress party, Indian National Congress, Sonia Gandhi