நாடாளுமன்றத்தைச் சீரமைக்க ஒதுக்கப்பட்ட 20,000 கோடியை ரத்து செய்யவேண்டும்- மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

நாடாளுமன்றத்தைச் சீரமைக்க ஒதுக்கப்பட்ட 20,000 கோடியை ரத்து செய்யவேண்டும்- மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
  • Share this:
டெல்லி மற்றும் நாடாளுமன்றத்தை சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 20,000 கோடி ரூபாயை மத்திய அரசு ரத்து செய்து கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவால் இந்திய அளவில் தொழில்கள் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதி இரண்டாண்டுகளுக்கு நிறுத்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முன்னாள் பிரதமர்கள், எதிர்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்திருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், ‘கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் இருந்தால் கூறச் சொல்லியிருந்தீர்கள். அதனடிப்படையில், இந்த ஆலோசனைகளை வழங்குகிறேன் என்று குறிப்பிட்டு ஐந்து ஆலோசனைகளை முன்வைத்தார். அதன்படி, ‘டெல்லி மற்றும் நாடாளுமன்றத்தை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு ரத்து செய்து, அதனை கொரோனா நிவாரண பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும். இப்போதுள்ள நாடாளுமன்றத்திலேயே சுமுகமாக பணிகளை மேற்கொள்ள முடியும். அதனை புதுப்பிப்பதற்கு அவசரம் ஒன்றும் ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தை புதுப்பிப்பதற்கு பதிலாக அடிப்படை வசதிகளைக் கொண்ட புதிய மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்காக கட்டலாம். மருத்துவ பணியாளர் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடியை பயன்படுத்தலாம்.


ஊடக விளம்பரங்களுக்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ. 1,250 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த விளம்பரங்களை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு மொத்த செலவில் 30 சதவீதம் வரை (ரூ. 2.50 லட்சம் கோடி)குறைத்துக் கொண்டு அதனை வெளிமாநில தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் செய்வோரின் நலனுக்கு பயன்படுத்தலாம்.

குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களை முடிந்தவரை ஒத்தி வைக்க வேண்டும். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு பயண செலவு மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 393 கோடியாக உள்ளது.PM Cares -க்கு அனுப்பப்படும் கொரோனா நிவாரண நிதி அனைத்தும், பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரணை நிதிக்கு மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் வெளிப்படைத் தன்மை, கணக்கீடு உள்ளிட்டவை உறுதி செய்யப்படும். ஏற்கனவே பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ. 3,800 கோடி வரை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading