Home /News /national /

சோனாலி போகாத் மரணத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்

சோனாலி போகாத் மரணத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்

சோனாலி போகாட் வழக்கில் கோவா காவல்துறை நடவடிக்கை

சோனாலி போகாட் வழக்கில் கோவா காவல்துறை நடவடிக்கை

சோனாலி போகத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Goa, India
    சோனாலி போகத் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில், மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து, அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கோவா காலல்துறையினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

    ஹரியானா மாநில பாஜக நிர்வாகியும் நடிகையுமான சோனாலி போகத், கடந்த 23ஆம் தேதி கோவா மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியில் பிக் பாஸ் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான இவரது மரணத்தை முதலில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி இரவில் கோவாவின் அஞ்சுனா கடற்கரை பகுதியில் உள்ள ஓட்டலில் சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் உடன் இணைந்து சோனாலி, நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. மரணத்திற்கு முன்பு அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி இதுவாகும்.

    மேலும், 23ஆம் தேதி அதிகாலையில் நடக்கவே முடியாத நிலையில் இருந்த சோனாலியை, சுதிர் சங்வான் தாங்கிப் பிடித்தவாறு அழைத்துச் செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சோனாலி போகத் மரண வழக்கை, கொலை வழக்காக கோவா போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி. ஓம்வீர் சிங், விடுதியில் தங்கியிருந்த சோனாலிக்கு, ரசாயனம் கலந்த மதுபானத்தை வலுக்கட்டாயமாக சுதிர் சங்வான் கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளதாக கூறினார்.

    இதையும் படிங்க: கர்நாடக கல்வித்துறையில் பெரும் ஊழல் - 13,000 பள்ளிகளின் கூட்டமைப்பு பிரதமருக்கு புகார் கடிதம்

    இதையடுத்து, சோனாலியை குளியல் அறைக்கு அழைத்துச் சென்று, இரண்டு மணி நேரத்துக்குப் பின்னரே வெளியே வந்ததற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஓட்டலில் என்ன நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக ஓம்வீர் சிங் கூறினார்.

    சோனாலி போகத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், ரசாயனம் தொடர்பான அறிக்கைகள் வந்த பின்னரே, மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, சோனாலியின் சொத்து மற்றும் பணத்தை அபகரிக்கும் நோக்கில் அவரை சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். 43 வயதாகும் சோனாலி போகத்துக்கு, 15 வயதில் மகள் உள்ள நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் சஞ்சய் போகத் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Goa, Murder case, Police

    அடுத்த செய்தி