கணவனை இழந்த தனது தாயிக்கு மீதம் இருக்கும் வாழ்நாளுக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக 45 வயதில் மகன் மறுமணம் செய்துவைத்த நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (23). இவரின் தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அதன்பின்னர், அவரின் தாய் ரத்னா தனியாளாக சம்பாதித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றினார். கணவர் இறந்த பிறகு உறவினர்கள் எந்தவித நல்ல காரியங்களுக்கும் ரத்னாவை அழைக்கவில்லை. அழைத்தாலும் கணவன் இல்லாததால் ரத்னா விழாக்களில் கலந்து கொள்ளவில்லை. அப்படி விழக்களுக்கு போனால் இழிவாக நடத்தப்படுவோம் என்ற பயத்தில் இருந்துள்ளார்.
இது அவருக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூடப் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அவரது சுமைகளையும் அன்பையும் பகிர்ந்துகொள்ள அவருக்குத் துணை தேவை என்பதை அவரது மகன் யுவராஜ் உணர்ந்துள்ளார். மனைவி இறந்தால் ஆண்கள் வேறு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்த சமுதாயம், பெண்களுக்கும் அது போன்று ஏன் நினைக்கவில்லை என்று நினைத்துள்ளார். இது குறித்து யுவராஜ் கூறும்போது, "என் அம்மாவை மறுமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைப்பது என்று முடிவு செய்தேன். என் அம்மாவை இதற்கு சம்மதிக்க வைக்க 3 ஆண்டுகள் ஆனது. இதற்காக எனது சமுதாயம் மற்றும் உறவினர்களை சம்மதிக்க வைப்பது அதை விட கடினமாக இருந்தது. என் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மூலம் என் அம்மாவுக்கு ஏற்ற துணையைத் தேடினேன்.
'குளிருக்காக சாக்குபைகளை போர்த்திக்கொண்டு படுத்தேன்' - சிவக்குமார் உருக்கமான பேச்சு
அதிர்ஷ்டவசமாக மாருதி கணவத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. என் அம்மாவிடமும், மாருதியிடமும் பேசி திருமணத்தை முடிவு செய்தோம். என் அம்மாவுக்கு ஏற்ற துணையை தேடிக்கண்டுபிடித்த அந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாளாகும்" என்று தெரிவித்தார்.
இது குறித்து மாருதி கணவத் கூறுகையில், ``கடந்த சில ஆண்டுகளாக நான் தனியாகத்தான் வசித்து வருகிறேன். ரத்னாவை சந்தித்துப் பேசிய பிறகு, அவரின் குடும்பத்துடன் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என்று நினைத்தேன். ரத்னாவுக்கு மறுமணம் தொடர்பாக முடிவு எடுப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. இறந்துபோன கணவரை மறக்க அவர் தயாராக இல்லை என்று தெரிவித்தார்’'.
அதன் பின் நீண்ட யோசனைக்கு பின் ரத்னா இதற்கு சம்மதித்துள்ளார். ரத்னா மற்றும் மாருதிக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மகனே ரத்னாவின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.இது அந்த கிராமத்து மக்கள் மட்டும் அன்றி இந்திய முழுவதுமிருக்கும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.