முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவை வாட்டி வதைக்கும் வெப்பம் - பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரிக்கை

கேரளாவை வாட்டி வதைக்கும் வெப்பம் - பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரிக்கை

கேரளா

கேரளா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன மழையால் பெரும் சேதத்தை சந்தித்த கேரளாவில் இப்போது வெயில் வாட்டி வதைக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன மழையால் பெரும் சேதத்தை சந்தித்த கேரளாவில் இப்போது வெயில் வாட்டி வதைக்கிறது. 54 டிகிரி என வெப்பக் குறியீட்டு எண் பதிவாகியுள்ளது. வரும் கோடை காலத்தில் அம்மாநிலத்தில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

கடவுளின் சொந்த தேசம் கேரளா என்பார்கள். இயற்கை எழில் சூழ்ந்த மாநிலம். ஆனால் அண்மைக் காலமாக கேரளா பல்வேறு இயற்கை முரண் சுழற்சிகளை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு சேதங்களும் தவிர்க்க முடியாததாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழையால் மிகவும் பாதிப்பிற்குள்ளான கேரளாவில் இப்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கோடை இன்னும் முழுமையாக தொடங்காத நிலையில், கடலோர மாநிலமான கேரளாவில் இப்போது வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அம்மாநிலத்தின் தென்பகுதிகளில் சில இடங்களில் 54 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே வரும் கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பத் தாக்குதலுக்கு இந்தப் பகுதிகள் உள்ளாகலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த வெப்பக் குறியீடு என்பது  புவி வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கேரள பேரிடர் ஆணையத்தின் அறிக்யைின் படி திருவனந்தபுரத்தின் தென்பகுதி, ஆழப்புழா, கோட்டயம் மற்றும் கன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிகப்படியான வெப்பக் குறியீடு பதிவாகியுள்ளது. அதே போல், கொல்லம், ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் 45 டிகிரியை தாண்டி வெப்பக் குறியீடு பதிவாகியுள்ளது.

கோடைகாலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பே, காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் பத்தினம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் 40 டிகிரிக்கும் மேல் வெப்பக் குறியீட்டு எண் பதிவாகியுள்ளது. மலைப்பிரதேச மாவட்டங்களான இடுக்கி, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தான் 29 டிகிரி செல்சியஸ் என வெப்பக் குறியீட்டு எண் பதிவாகியுள்ளது.

கோடைகாலம் தொடங்குதற்கு முன்னரே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின்  தாக்கம் அதிகரித்துள்ளதால், முழுமையான கோடைகாலத்தில் மாநிலம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. எனவே, கோடை வெயிலின் தாக்கத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மேற்கொள்வதற்கும் கையாள்வதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசையும்  பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த கோடைகாலத்தில் பொதுவாகவே இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கமும், வெப்ப அலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோடைகாலம் தொடங்குவதங்கு முன்னரே கேரளாவில் வெப்பக் குறியீட்டு எண் 50-ஐ தாண்டி பதிவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Kerala