ஐ.நா. பொதுசபையில் 76வது கூட்டத்தில் பேசிய இம்ரான்கானுக்கு தனது பேச்சின் மூலம் பதிலடி கொடுத்த ஐ.நா.வில் இந்தியாவின் முதன்மை செயலாளராக பணியாற்றும் சினேகா தூபேவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுசபையில் 76வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து ஜம்மு- காஷ்மீர் மக்கள் மீதான உரிமை மீறல்களை இந்தியா ராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் சமீபத்தில் இறந்த காஷ்மீர் விடுதலைப்போராட்டத் தலைவர் கிலானியின் உடலை, அவர் குடும்பத்தாரின் அனுமதி இல்லாமலே அடக்கம் செய்யப்பட்ட இடத்திருந்து கைப்பற்றி ரகசிய இடத்தில் இந்திய அரசாங்கம் அடக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்கள் விருப்பத்தின்படி, ஜம்மு- காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கண்டால்தான் தெற்காசிய பிராந்தியத்தில் நிலையான அமைதி ஏற்படும் என்றும் இம்ரான் கான் கூறினார்.
இந்தியா சார்பில் பதிலளித்த சினேகா தூபே
இதை தொடர்ந்து பேசிய ஐ.நா.வில் இந்தியாவின் முதன்மை செயலாளரான சினேகா தூபே, இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை இம்ரான் கான் வைப்பதாகவும், பொய்யான தகவல்களை பாகிஸ்தான் தலைவர்கள் வைப்பது இது முதன்முறை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி சில விளக்கங்களை அளிக்க விரும்புவதாக குறிப்பிட்ட அவர், “ இந்தியா மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்கள் நாட்டில் தீவிரவாதிகள் சுதந்திரமாக உலாவுவதையும் குடிமக்கள் குறிப்பாக சிறுபான்மையினர் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளதையும் உலகத்தின் பார்வையில் இருந்து திசை திருப்ப முயல்கிறது” என்று விமர்சித்தார்.
மேலும் படிக்க : கூட்டுறவு நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியனாக உயர்த்தும் - அமித் ஷா
காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும். இதில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பகுதிகளும் அடங்கும். பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளையும் உடனடியாக வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் பாகிஸ்தானை வலியுறுத்தினார்
கோவாவை சேர்ந்த சினேகா தூபே, தனது பள்ளிப்படிப்பை கோவா மற்றும் புனேவிலும், எம்.பில். பட்டத்தை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 2012ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதிய சினேகா தூபே, தனது முதல் முயற்சியிலே வெற்றி பெற்று ஐ.எஃப்.எஸ் அதிகாரினார்.
2014ல் ஸ்பெயின் நாட்டில் இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஐ.நா.வில் இந்தியாவின் முதன்மை செயலாலராக பொறுப்பேற்றார்.
இது முதல்முறை அல்ல
இந்தியாவின் இளம் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு பதிலளிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2016ம் ஆண்டில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதியாக சயித் அக்பரூதின் இருந்த காலத்திலேயே இது தொடங்கிவிட்டது. அப்போது இந்தியாவின் முதன்மை செயலாளராக இருந்த ஈனம் கம்பீர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிஃப்க்கு பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்தி பேசியபோது, பாகிஸ்தான் போர் குற்றங்களை தங்களது கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறது. தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கி வருவதாகவும் பேசினார்.
இதையும் படிங்க: தாலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ஃபரூக் அப்துல்லா
பின்னர் 2017ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி இந்தியா மீது பழி சுமத்தியது. இதற்கு பதிலளித்து பேசிய ஈனம் கம்பீர், பாகிஸ்தான் ஒசாமாவுக்கும் முல்லா ஓமருக்கும் அடைக்கலம் கொடுத்துவிட்டு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக சொல்வது நம்பும்படி இல்லை. உலக நாடுகள் அனத்திலுமே பாகிஸ்தான் என்பது பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள நாடு என தெரியும். பாகிஸ்தான் தற்போது டெரரிஸ்தான் ஆக மாறிவிட்டது என்று கூறியிருந்தார்.
விதிஷா மைத்ரா
இதேபோல் 2019ம் ஆண்டு ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பதிலளித்து பேசிய அப்போதைய இந்தியாவின் முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா, ஐ.நா.வால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 135 பேர் பாகிஸ்தானில் உள்ளனர் என்றும் 25 முறை தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் அங்கு உள்ளன என்றும் குறிப்பிட்டார். 1971ல் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் இனபடுகொலை நடத்தியதாகவும் விமர்சித்திருந்தார். தற்போது அந்த வரிசையில் சினேகா தூபே தனது துணிச்சலான பேச்சு மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, India and Pakistan, UN