Home /News /national /

பாம்புகள் கடிப்பது ஏன்? கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

பாம்புகள் கடிப்பது ஏன்? கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்தால்  என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

snake bites | தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 2 நாட்களில் 2 பெண்கள் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்புகள் கடிப்பது ஏன்? கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

    தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 2 நாட்களில் 2 பெண்கள் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்புகள் கடிப்பது ஏன்? கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

    அனலைக் கக்கும் வெயிலோ, இடைவிடாத அடைமழையோ, எதுவாக இருந்தாலும், அப்போது வீடுகளுக்குள் விஷப் பூச்சிகள் வருவது சாதாரணம். பூரான், தேள் உள்ளிட்ட விஷப் பூச்சிகளோடு, ஒரு சில நேரங்களில் பாம்புகளும் வருவது வாடிக்கை. இவ்வாறு வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு கடித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரில் 15 வயது சிறுமி தீபா உயிரிழந்தார்.

    அதற்கு அடுத்த நாளே, நாகை மாவட்டம் காரையூரில் நல்லப்பாம்பு கடித்து மல்லிகா என்பவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரந்துபட்ட இந்த உலகில் 2,500க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் இருக்கின்றன.

    அதில் பெரும்பாலான பாம்புகளுக்கு விஷம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவில் இருக்கும் 230 வகை பாம்புகளில், சுமார் 50 இனங்கள் மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. ராஜநாகம், கருநாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகளுக்கு இருக்கும் விஷம் பயங்கரமானவை.

    எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், இரைகளை வேட்டையாடவுமே கொடிய விஷத்தை பயன்படுத்துகின்றன பாம்புகள். சில நேரங்களில் எதுவும் செய்யாத மனிதர்களைக் கூட கடித்து, விஷத்தை கக்கி விடுகின்றன பாம்புகள். அச்சம் காரணமாக, அவற்றுக்கு ஏற்படும் எச்சரிக்கை உணர்வே அதற்கு காரணம்.



    பாம்பு கடியால் பாதிப்புக்கு உள்ளான நபர், பதற்றம் அடைவதைத் தவிர்த்து, அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். பதற்றம் ஏற்பட்டால், ரத்தம் ஓட்டம் அதிகரித்து, உடல் முழுவதும் வேகமாக பரவி விடும் விஷம். அதேபோல், பாம்பு கடிபட்ட நபர் ஓடுவதோ, நடப்பதோ கூட அபாயத்தை அதிகரிக்கும்.

    திரைப்படங்களில் பார்ப்பதுபோல, பாம்பு கடித்துவிட்டால், துணியை கிழித்து இறுக்கமாக கட்டுவதை தவிர்ப்பது நல்லது. இறுக்கமாக கட்டுவதால், ரத்த ஓட்டம் பாதித்து, அந்த பகுதியே செயலிழந்து, அழுகிப் போகும் ஆபத்து உண்டு.



    கடிபட்ட இடத்தை ஓடும் சுத்தமான நீர் கொண்டு சோப்பு போட்டு கழுவுவது சில நேரங்களில் உயிரையேக் காப்பாற்றும். ஏனெனில், பாம்போ, தேளோ சில நேரங்களில் லேசாக தோலில் மட்டுமே சீண்டியிருக்கும். அதனால், சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் ரத்தத்தில் விஷம் கலப்பதை தடுத்து விடலாம்.
    இது மட்டுமே பாம்பு கடித்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி.

    திரைப்படங்களில் பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்தே விஷத்தை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள் நம் ஹீரோக்கள். வேடிக்கை பார்ப்பவர்களில் சிலர், கடித்துச் சென்ற பாம்பை துரத்திப் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். பூச்சி கடித்தால் கூட பாம்பு கடித்துவிட்டதாக கருதி, கத்திக் கூச்சல் போடுபவர்களும் இருக்கிறார்கள்.



    கடித்தது பாம்போ, தேளோ அதை அடையாளம் கண்டுகொள்வது நல்லது. எந்த பாம்பு கடித்தது என்று தெரிந்துவிட்டால், மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது எளிது. ஏனெனில், ராஜநாகம், நல்ல பாம்பு போன்றவை கடித்தால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

    அரை மணி நேரத்தில் விஷமுறிவு மருந்து கொடுத்துவிட்டால், கடிப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றி விட முடியும். கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சாரைப் பாம்பு போன்றவை கடித்துவிட்டால், ரத்த நாளங்களை பாதிக்கும்.

    அதனால், ரத்த உறைதல் தடுக்கப்படும் அல்லது ரத்த சிவப்பணுக்கள் அழிந்துவிடும். அதற்காக, எந்த பாம்பு கடித்தது என்று தெரிந்தால் மட்டுமே, சிகிச்சை அளிக்க முடியும் என்பதெல்லாம் இல்லை.



    ரத்தம் உறையும் நேரத்தைக் கணக்கிட்டு, அது எந்த வகை பாம்பு என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள் மருத்துவர்கள். பாம்பு கடித்த இடத்திற்கு மிக அருகில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 2 இருந்தால், அரசு மருத்துவமனையை நாடுவதே நல்லது.

    ALSO READ |  போஸ்ட் ஆபீஸில் இந்த சேமிப்பை தொடங்கினால் மாதம் ரூ. 5000 கிடைக்கும்! முழு விபரம்
     பல தனியார் மருத்துவமனைகளில் பாம்பு கடிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்பதைத் தாண்டி, அவர்களிடம் ஆண்டி ஸ்நேக் விநோம் எனப்படும் விஷ முறிவு மருந்தும் இருப்பதில்லை. ஆகவே அரசு மருத்துவமனைகளுக்கு பாம்பு கடிப்பட்ட நபரை அழைத்துச் செல்வதே ஆபத்தை குறைக்கும்.

     

    செய்தியாளர்: ராபர்ட்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Snake

    அடுத்த செய்தி