முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனாவுக்குப் பின் தூக்கமின்றி தவிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்கள்... ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

கொரோனாவுக்குப் பின் தூக்கமின்றி தவிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்கள்... ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஆழ்ந்த உறக்கம் என்பது ஒவ்வொரு நாளும் சொர்க்கத்திற்கு சென்று வருவதைப் போன்றது. ஆனால், சூரிய உதயம் முதல் மறைவு வரை இயந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் காலச்சூழலில், போதுமான இரவு உறக்கத்தை பெறுகிறோமா என்றால் இல்லை என்பதே நிதர்சனம். நாள் முழுவதும் வேலை செய்யும் மனிதன், உடலுக்கும், மூளைக்கும் அளிக்கும் ஓய்வே இரவு உறக்கம். உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், சுறுசுறுப்பாக இயங்கவும் தூக்கம் அவசியம். உடல்நலத்திற்கும், மூளை செயல்பாட்டிற்கும், நினைவாற்றலுக்கும், தூங்கும் நேரத்தின் அளவுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இதய ஆரோக்கியத்துக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் அத்தியாவசியம் என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள். 3 முதல் 5 வயதுடைய குழந்தை ஒரு நாளில் சராசரியாக 10 முதல் 13 மணி நேரம் உறங்க வேண்டும் எனவும், 6 முதல் 12 வயதுடைய சிறார்கள் 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 13 முதல் 18 வயதுடையோர் 8 முதல் 10 மணி நேரமும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாள்தோறும் 7 மணி நேர உறக்கம் அவசியம் எனவும் கூறுகின்றனர்.

இப்படி பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்புக்குப் பின்னர் பெரும்பாலான இந்தியர்கள் sleep apnea எனும் தூக்கமின்மையால் அவதிப்படுவது தெரிய வந்துள்ளது. சத்தமாக குறட்டை விடுவது, பகல் நேரங்களில் தூக்க கலக்கத்துடன் இருப்பது, கால்களில் வலி ஏற்பட்டு அசைக்க முடியாமல் போவது, நள்ளிரவில் விழிப்பு வந்து மீண்டும் தூங்க முடியாத நிலை ஏற்பவது போன்றவை sleep apnea-வின் அறிகுறிகளாக உள்ளன.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், 2 கோடியே 90 லட்சம் பேர் தூக்கமின்மையால் அவதிப்படுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 15 சதவீதம் பேர், டெல்லியில் 13 சதவீதம் பேர் மட்டுமே நல்லுறக்கம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்தியர்களில் 40 சதவீதம் பேர் வேலை நாட்களில், 7 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குவதாகவும், 60 சதவீதம் பேர், அவ்வப்போது தூக்கமின்மைக்கு ஆளாவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

46 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் காரணாமாகவே தூக்கமின்மை ஏற்படுவதாகவும், தூக்கமின்மையால் அவதிப்படும் 85 சதவீதம் பேர் அடுத்த நாளில் தங்களின் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதும் புள்ளி விரவரங்களில் தெரியவந்துள்ளது. எனினும், உரிய நேரத்தில் மருத்துவரை அணுகினால், sleep apnea மற்றும் insomnia போன்ற தூக்கமின்மை பிரச்னைகளை சரிசெய்ய முடியும் எனவும், மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவையும் நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

-  லாவண்யா ஸ்ரீராம், சிறப்பு செய்தியாளர்

First published:

Tags: Sleep Apnea, Sleepless