மத்தியப் பிரதேச மாநிலத்தில் 65 வயதான மன நலம் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்மையில் இந்த முதியவரை அவரின் பெயர் முகமதா எனக் கேட்டு
பாஜக நிர்வாகி சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வழக்கு மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தினேஷ் குஷ்வாஹா என அடையாளம் காணப்பட்டது. இவர் பாஜகவை சேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், தாக்குதலுக்கு ஆளான முதியவரின் பெயர் பன்வார்லால் ஜெயின் எனவும் இவர் ரத்லாம் மாவட்டம் சர்சி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மன நலம் பாதிக்கப்பட்ட இவர் மே 15ஆம் தேதி குடும்பத்தில் இருந்து தொலைந்துள்ளார். இவரை காணவில்லை என காவல்துறையில் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், காவல்துறையும் கடந்த ஒரு வாரமாக தேடி வந்துள்ளது.
இந்நிலையில், 65 வயது முதியவரான ஜெயின் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட நிலையில், இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதியவர் ஜெயினை 'உனது பெயர் என்ன முகமதா, உனது ஆதார் அட்டையை காட்டு' என கேள்வி கேட்டு குஷ்வாஹா சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிலையில், நீமுச் மாவட்ட காவல்துறை அந்த முதியவரை சடலமாக கண்டெடுத்து அவரின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைத்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன அவரது குடும்பத்தினர் தாக்குதலில் ஈடுபட்ட தினேஷ் குஷ்வாஹாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆவேசத்துடன் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை கொலை வழக்கு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றிருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கும் என உள்துறை அமைச்சர் நாத்தோராம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 'இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதற்கும் கட்சி அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாரையும் மாநில அரசு சும்மா விடாது' என பாஜக மாநில செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:
ராஜீவ் நினைவு தினத்தில் எக்குதப்பாக ட்வீட் போட்டு சிக்கிய காங்கிரஸ் தலைவர்
அதேவேளை, இந்த சம்பவத்திற்கு ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. மக்களிடையே வெறுப்பு அரசியலை பாஜக முன்னெடுத்து இவ்வாறு மோசமான நிலைக்கு மாநிலத்தை கொண்டு சென்றுள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஜீது பட்வாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.