ராஜஸ்தான் ரன்தம்போர் தேசிய பூங்காவில் இருந்து 6 புலிகள் மாயம்! - ஓராண்டாக தென்படவில்லை என தகவல்..

புலிகள் மாயம்

இயற்கை மரணம் அல்லது கடத்தலுக்கான எந்த தடையமும் கிடைக்கவில்லை, என்றாலும் இந்த புலிகள் வேறு வனப்பகுதிக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுவதாக வெர்மா கூறினார்.

  • Share this:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரன்தம்போர் தேசிய பூங்காவில் வசித்து வந்த 6 புலிகள் கடந்த ஒராண்டாக மாயமாகிவிட்டதாக அந்த பூங்காவின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

புலிகள் மாயமாகியிருப்பது தொடர்பாக ரன்தம்போர் தேசிய பூங்காவின் கள இயக்குனர் டி.சி.வெர்மா கூறுகையில், ரன்தம்போர் தேசிய பூங்காவில் இருந்து 6 புலிகள் மாயமாகியிருப்பதாகவும், இந்த புலிகளை கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் கடைசியாக பார்க்க முடிந்தது எனவும் கூறியுள்ளார். மாயமான புலிகளில் இரண்டு புலிக் குட்டிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கை மரணம் அல்லது கடத்தலுக்கான எந்த தடையமும் கிடைக்கவில்லை, என்றாலும் இந்த புலிகள் வேறு வனப்பகுதிக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுவதாக வெர்மா கூறினார். மாயமான 6 புலிகளும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவை என்றும் கொரோனா காலத்தில் இந்த புலிகள் மாயமாகி இருப்பதாகவும், புலிகளை கண்டறியும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

புலிகள் மாயம்


புலிகள் மாயமாகி இருக்கும் விவகாரம் தொடர்பாக Ranthambhore சரணாலய பகுதியைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், புலிகள் மாயமாகி இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம், குறிப்பாக சமீப காலமாக அங்கு சுற்றுலா உள்ளிட்ட காரணங்களால் மனித நடமாட்டம் அதிகரித்துவிட்டதால் புலிகள் மூர்க்கத்தனமாக மாறியிருந்தன. அண்டை கிராமவாசிகள் அவற்றிற்கு விஷம் வைத்தும் கொலை செய்திருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை எனவும் தெரிவித்தனர்.

இதே போல ராஜஸ்தானில் உள்ள கைலாதேவி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து மேலும் ஒரு புலி கடந்த ஓராண்டாக மாயமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Published by:Arun
First published: