முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லியில் விவசாயிகள் போராட்டக் களத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் செயற்பாட்டாளர்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டக் களத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் செயற்பாட்டாளர்!

விவசாயிகள் போராட்டம் - கோப்புப் படம்.

விவசாயிகள் போராட்டம் - கோப்புப் படம்.

பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் செயற்பாட்டாளர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

மேற்குவங்கத்தில் இருந்து திக்ரி எல்லைக்கு வந்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த 25 வயது இளம் பெண் செயற்பாட்டாளர் ஒருவர் போராட்டக் களத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்தப் பெண் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் டெல்லி - பஞ்சாப் எல்லைப் பகுதியில் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கேயே கூடாரம் அமைத்து தங்கி, உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மேற்குவங்கத்தில் இருந்து டெல்லி வந்த 25 வயதான பெண் செயற்பாட்டாளர் ஒருவர் திக்ரி எல்லையில் விவசாயிகள் அமைத்துள்ள டெண்ட் கூடாரத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி கிசான் சோசியல் ஆர்மி என்ற விவசாய இயக்கம் ஒன்று மேற்குவங்கத்தின் ஹூக்ளியில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அப்போது செயற்பாட்டாளரும், டிசைனரும், கலைஞருமான 25வயதான பெண் ஒருவருக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கிசான் சோசியல் ஆர்மி அமைப்பினரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

டெல்லிக்கு வந்து விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதாக கிசான் சோசியல் ஆர்மி நிர்வாகத்தினரிடம் அப்பெண் செயற்பாட்டாளர் கூறியிருக்கிறார். இதன் பின்னர் அவர் டெல்லிக்கு வந்து திக்ரி எல்லையில் விவசாயிகள் அமைத்துள்ள கூடாரத்தில் தங்கியிருக்கிறார்.

ஏப்ரல் 11ம் தேதி பஞ்சாபுக்கு கிசான் சோசியல் ஆர்மி அமைப்பினருடன் ரயிலில் பயணம் செய்த போது அவ்வமைப்பினர் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மறுநாளே திக்ரி எல்லைக்கு திரும்பிய நிலையில் அவர் தனியாக இருந்த போது கூடாரத்திற்குள் புகுந்த கிசான் சோசியல் ஆர்மி அமைப்பினர் அவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தொலைபேசியில் தனது தந்தையை தொடர்பு கொண்டு பெண் செயற்பாட்டாளர் கூறியிருக்கிறார். அவர்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர் கூறுயிருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் விவசாய சங்க தலைவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் பெண்ணின் வீடியோ வாக்குமூலத்தையும் விவசாய சங்க தலைவர்களுக்கு காட்டியுள்ளனர்.

இதனையடுத்து பெண் போராட்டக்காரர்கள் தங்கியிருக்கும் கூடாரத்தில் அந்த பெண் செயற்பாட்டாளர் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 21ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி அந்த பெண் செயற்பாட்டாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க:   எஸ்.யூ.வி காருக்குள் பாலியல் வன்புணர்வு செய்ய முடியுமா?: ஆர்.டி.ஓவிடம் அறிக்கை கேட்ட காவல்துறை!

அப்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கிசான் சோசியல் ஆர்மி அமைப்பினைச் சேர்ந்த 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனில் மாலிக், அனுப் சிங், அன்குஷ் சங்வான் மற்றும் ஜக்திஷ் பிரார் ஆகியோர் முக்கிய தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் செயற்பாட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்க தலைவர்கள் கூறுகையில், முதலில் இந்த விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்த போது நாங்கள் அதனை விசாரித்தோம். அந்த நபர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன, அவர்களை ஒதுக்கி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

இது குறித்து Ekta Ugrahan என்ற அமைப்பின் மகளிர் அணி தலைவி ஹரிந்தர் கவுர் பிந்து கூறுகையில், பெரும்பாலான சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்களுக்கு இந்த விவகாரம் குறித்து தெரியும். ஆனால் அவர்கள் ஏன் அமைதி காத்தனர் என தெரியவில்லை. அப்பெண்ணின் பெற்றோரை நாங்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது என்றார்.

பெண் செயற்பாட்டாளர் இறப்புக்கு முன்னதாக அவருடன் நேரடி தொடர்பிலிருந்த பஞ்சாப் கிசான் சங்க தலைவர் ஜஸ்பிர் கவுர் நத் கூறுகையில் இது மிகவும்வருத்தத்திற்குரியது என்றார். மேலும் இங்கு ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு உள்ளனர். விவசாயிகள் இது குறித்து விசாரித்து இனி இது போன்று எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்வார்கள் என கூறினார்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Farm laws, Farmers Protest Delhi, Gang rape