சுவேந்து அதிகாரி சொன்னால் பாஜகவில் இணைவேன் - திரிணாமுல் எம்.பி அதிரடி!

சுவேந்து அதிகாரி

தனது தந்தை தனக்கு ஆதரவாக பாஜகவில் இணைவார் என்று சுவேந்து அதிகாரி கூறியிருந்தார். அதற்கு ஏற்றார்போல சமீபத்தில் பாஜக எம்.பி லாக்கெட் சாட்டர்ஜியை சிசிர் அதிகாரி சந்தித்தார். வரும் 20ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கந்தி பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் சிசிர் அதிகாரி கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

  • Share this:
மேற்குவங்க முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியின் தந்தையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சி எம்.பியுமான சிசிரி அதிகாரி பாஜகவில் இணைவேன் என தெரிவித்துள்ளது மேற்குவங்க அரசியலை மேலும் பரபரப்பான கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறது.

மேற்குவங்க ஹெவிவெயிட் அரசியல்வாதியும், அடிமட்ட அளவில் செல்வாக்கு பெற்ற வலிமையான தலைவருமாக விளங்கும் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய தலைவராகவும் அம்மாநில அமைச்சராகவும் இருந்தார். கடந்த நவம்பரில் இவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு அதிரடியாக தனது ஜாகையை மாற்றிய பின்னர் அம்மாநில அரசியல் பாஜக Vs திரிணாமுல் காங்கிரஸ் என்ற போட்டியை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

சுவேந்து அதிகாரியின் வருகைக்கு பின்னர் எம்.பி, எம்.எல்.ஏக்கள் உட்பட பல முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிட்டால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்துவேன் என்ற சவால் விடுத்தார். இதனிடயே சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி போட்டியிடுகிறார்.

சுவேந்து அதிகாரி இப்படி ஒரு சவாலை முன்வைக்க வலுவான ஒரு காரணமும் இருக்கிறது. செல்வாக்கான அரசியல் பின்னணியை கொண்ட சுவேந்து அதிகாரியின் தந்தை திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவராக விளங்குகிறார். அவர் 2019 தேர்தலில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருந்து வருகிறார். தந்தை மட்டுமல்ல சகோதரர் திப்யேந்து அதிகாரியும் திரிணாமுல் எம்.பி தான்.

இதனிடையே தனது தந்தை தனக்கு ஆதரவாக பாஜகவில் இணைவார் என்று சுவேந்து அதிகாரி கூறியிருந்தார். அதற்கு ஏற்றார்போல சமீபத்தில் பாஜக எம்.பி லாக்கெட் சாட்டர்ஜியை சிசிர் அதிகாரி சந்தித்தார். வரும் 20ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கந்தி பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் சிசிர் அதிகாரி கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சிசிர் அதிகாரி, “நான் என் மகனுக்கு ஆதரவளிப்பேன். பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்டால் கலந்து கொள்வேன். பாஜகவில் இணைய வேண்டும் என கேட்டால், பாஜகவி இணைவேன்” என தெரிவித்துள்ளார்.

நந்திகிராம் தொகுதியானது புர்பா மெதின்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சிசிர் அதிகாரியின் குடும்பம் மிகவும் செல்வாக்கு படைத்ததாக விளங்கி வருகிறது. நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி, சுவேந்து அதிகாரி இருவரும் நேருக்கு நேர் மோதுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Arun
First published: