ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒற்றை ட்வீட்டால் ஏற்பட்ட சங்கடம்: அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தால் கொந்தளித்த சிங்கப்பூர் அரசு!

ஒற்றை ட்வீட்டால் ஏற்பட்ட சங்கடம்: அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தால் கொந்தளித்த சிங்கப்பூர் அரசு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பவர்கள்,நெடுநாள் நட்பு தேசங்களுக்கு இடையேயான உறவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்  என்பதை உணர வேண்டும் என கெஜ்ரிவாலை மறைமுகமாக கண்டித்துள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கொரோனா விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய கருத்து சிங்கப்பூர் அரசை அதிருப்திக்குள்ளாகி உள்ளது.

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாகவும் அது குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது என்பதால் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமான விமான சேவையை ரத்து செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “ சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது, இந்தியாவில் இது மூன்றாவது அலையாக வரக்கூடும். மத்திய அரசிடம் எனது வேண்டுகோள்: 1. சிங்கப்பூருடனான விமான சேவைகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் 2. குழந்தைகளுக்கும் தடுப்பூசி தயாரிக்கப்பட வேண்டும்” என அவர் கூறியிருந்தார்.

இருப்பினும் கெஜ்ரிவாலுக்கு ட்விட்டரிலேயே பதிலளித்த மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதலே சர்வதேச விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மட்டும் தான் நாடு திரும்ப விமானங்களை இயக்கி வருகிறோம். இவர்கள் நம் நாட்டு குடிமக்கள், இருப்பினும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என பதில் அளித்திருந்தார்.

சிங்கப்பூர் அரசு கண்டனம்:

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது, “சிங்கப்பூர் வேரியண்ட் என்ற வகை கொரோனா என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிக்கையில் காணப்படும் கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை. சிங்கப்பூரில் அண்மை காலங்களில் குழந்தைகள் உட்பட பெரும்பாலனவர்களிடம் கண்டறியப்படும் B.1.617.2 வகை கொரோனாவானது இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் ஆகும்.” என தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறுகையில், சிங்கப்பூர் வேரியண்ட் என்ற ஒன்றே கிடையாது. அரசியல்வாதிகள் உண்மையை உணர்ந்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்த சிங்கப்பூர் வேரியண்ட் என்ற கருத்திற்காக இன்று இந்திய வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்ட சிங்கப்பூர் அரசு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அந்நாட்டு அரசிடம் விமானக் கொள்கை மற்றும் கொரோனா வகை குறித்து பிரகடனம் செய்ய முதல்வருக்கு அதிகாரம் கிடையாது என எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பவர்கள்,நெடுநாள் நட்பு தேசங்களுக்கு இடையேயான உறவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்  என்பதை உணர வேண்டும் என கெஜ்ரிவாலை மறைமுகமாக கண்டித்துள்ளார்.

Read More:    கொரோனா சிகிச்சை மையத்தில் கைகளால் அடைப்பு எடுத்து கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்.பி!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த கருத்தால் இருநாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Arvind Kejriwal, COVID-19 Second Wave, Delhi, Singapore