நேற்று மாலை, டிசம்பர் 17-ஆம் தேதி, 65 வயதான சீக்கிய மதகுருவான பாபா ராம் சிங், சிங்கு பகுதி எல்லையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் கர்னல் மாவட்டத்தின் நிசிங் பகுதியில் உள்ள சிங்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்த் பாபா ராம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக விட்டுச்சென்ற குறிப்பில் “விவசாயிகளின் வலியை” தாங்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக சாலைகளில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் நீதி வழங்கவில்லை, இது மிக கொடுமை. துன்புறுத்தலை சகித்துக்கொள்வது பாவம், ஒடுக்குவது ஒரு பாவம். சிலர் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் கொடுமைக்கு எதிராகவும் நிற்கின்றனர். சிலர் விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர். அரசின் கொடுமைக்கு எதிராக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இது கொடுமைக்கு எதிரான குரல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல் ”என்று அந்த தற்கொலை குறிப்பில் எழுதியுள்ளதாக பிடிஐ செய்தி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்த் பாபா ராம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். “சாந்த் பாபா ராம் சிங் ஜியின் தற்கொலை பற்றிய செய்தி வேதனையானது. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் விவசாயிகள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். விவசாயிகளின் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும், மூன்று கருப்பு சட்டங்களும் திரும்பப் பெறப்படவேண்டும் ”என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
விவசாயத் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பு புதன்கிழமை தனது 21 வது நாளை எட்டியுள்ளது. பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ”மத்திய அரசின் பிரதிநிதிகளுடன், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், போராடும் விவசாயிகள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைப்பது, நிலைமையை விரைவாகத் தீர்ப்பதற்கு வழியமைக்கும் என அறிவுறுத்தியுள்ளது. சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற விரும்புவதால் எந்த வழியையும் வழங்க மாட்டோம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். “மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுடன் பேச விரும்புகிறது. ஆம் அல்லது இல்லை என்பது எந்தவொரு போராட்டத்திற்கும் முடிவு அல்ல. எம்.எஸ்.பி-ஐ நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் என்று எழுத்துப்பூர்வமாக வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் ஏபிஎம்சி சந்தைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் விளைபொருட்களை விற்க முடியும் ”என்று மாநில வேளாண்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி ஒரு செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டி, 17 நாட்களில் 11 விவசாயிகள் இறந்துவிட்டதாகக் கூறினார். இரண்டு சாலை விபத்துக்களில் பஞ்சாபில் இருந்து நான்கு விவசாயிகள் உயிரிழந்ததால், இப்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதன்கிழமை, கடனால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள், திக்ரி எல்லையில் உள்ள எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baba ram singh, Delhi chalo, Farmer protest, Sikh priest