பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை திடீரென நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரின் இந்த முடிவுக்கு முதல்வர் சரஞ்ஜித் சிங் சன்னியுடனான கருத்து மோதல் காரணமாக சொல்லப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், முதல்வராகவும் ஒரு சேர பயணித்துக் கொண்டிருந்தார் கேப்டன் அமரிந்தர் சிங். கடந்த சில ஆண்டுகளாகவே அமரிந்தர் சிங்குக்கும், அவரின் அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டு பிரச்னை பெரிதானது.
இதனையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்து, அமரிந்தர் சிங் எதிர்பை கையில் எடுத்தார். மேலும் அமரிந்தர் சிங்கை அரசியல் எதிரியாக கருதத்தொடங்கிய சித்து, அவரிடம் இருக்கும் அதிகாரத்தை குறைக்க நினைத்து மாநிலத் தலைவராக வேண்டும் என காய் நகர்த்தி வந்தார்.
அதற்கேற்றார் போல கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி, நவ்ஜோத் சிங் சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கியது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. இதன் பின்னரும் இருவருக்குள்ளும் கருத்து மோதல் தீர்ந்தபாடில்லை. அமரிந்தர் சிங்கிற்கு அரசியல் ரீதியில் நெருக்கடி கொடுத்து, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காய் நகர்த்தினார் சித்து. அமரிந்தரை முதல்வர் வேட்பாளராகக் கொண்டு 2022 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டால் காங்கிரஸுக்கு அது பலவீனம் என காங்கிரஸ் எம்.எ.எல்.ஏக்கள் சிலரும் போர்க்கொடி தூக்கினர். அந்த அழுத்தம் அதிகரிக்கவே கடந்த 10 தினங்களுக்கு முன் திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கேப்டன் அமரிந்தர்.
அவரைத் தொடர்ந்து, சரஞ்ஜித் சிங் சன்னியை புதிய முதல்வராக்கியது அகில இந்திய தலைமை, அவரின் தலைமையின் கீழ் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஏற்கனவே சித்துவுடன் சேர்ந்து சன்னி, டெல்லி சென்று வந்த நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன் சன்னி மீண்டும் டெல்லி சென்று வந்திருக்கிறார்.
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக சித்துவுக்கும், சன்னிக்கும் இடையே கருத்து மோதல் எழுந்ததாக கூறப்பட்டது. இன்று பஞ்சாபில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறவிருந்த நிலையில் தான் தனது மாநிலத் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார்.
Also Read: விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக அஸ்வின் காரணமா? – என்ன பிரச்னை?
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ரானா குர்ஜித் சிங் மீது ஏற்கனவே ஊழல் கறை படிந்துள்ளது. இவரை அமைச்சர் பதவியிலிருந்து ஏற்கனவே அமரிந்தர் சிங்கும் நீக்கியிருந்தார். இந்த நேரத்தில் ரானாவை மீண்டும் அமைச்சராக்குவதை சித்து தடுக்கப் பார்த்தபோதும், அவர் அமைச்சராவது உறுதியாகி இருக்கிறது. ரானா தவிர்த்து முதல்வரின் உறவினரான அருணா சவுத்ரியை அமைச்சராக அறிவித்ததும் சித்துவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் சித்துவின் ஒப்புதலோடு தான் அமைச்சரவை அறிவிக்கப்பட்டது எனவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். சித்து காங்கிரஸில் தொடருவாரா அல்லது ஆம் ஆத்மியில் இணைவாரா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
Also Read: பவானிபூர் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்? – கொல்கதா உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
சித்து ராஜினாமா குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள கேப்டன் அமரிந்தர் சிங், சித்து பஞ்சாபுக்கு ஏற்றவர் அல்ல என நான் தான் முன்பே கூறினேனே” எனக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Navjot singh sidhu, News On Instagram, Punjab