உயரம் காரணமாக திருமணமாகாத விரக்தி... தனக்கு ஒரு மணப்பெண்ணை கண்டுபிடிக்க காவல்துறையை அணுகிய நபர்!

உயரம் காரணமாக திருமணமாகாத விரக்தி... தனக்கு ஒரு மணப்பெண்ணை கண்டுபிடிக்க காவல்துறையை அணுகிய நபர்!

உ.பி நபர்

விலைமதிப்புமிக்க பொருட்களை தொலைத்தாலோ, அல்லது யாரேனும் காணாமல் போனாலோ காவல்துறையில் புகார் கொடுக்கலாம். ஆனால், தனக்கு ஒரு மணப்பெண்ணை கண்டுபிடித்து கொடுமாறு காவல்துறையை அணுகிய சம்பவம், காவல்துறை அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தியது.

  • Share this:
சமீபத்தில் 26 வயது நிரம்பிய ஒருவர், பொது சேவை அடிப்படையில் தனக்கு ஒரு மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுமாறு போலீசை வலியுறுத்திய சம்பவம் சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் தனிமையில் இருப்பதாலும், திருமண வரன்களால் நிராகரிக்கப்படுவதாலும் மிகுந்த மன அழுத்தத்துடனும், சோர்வுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏதேனும் விலைமதிப்புமிக்க பொருட்களை தொலைத்தாலோ, அல்லது யாரேனும் காணாமல் போனாலோ காவல்துறையில் புகார் கொடுக்கலாம். ஆனால், தனக்கு ஒரு மணப்பெண்ணை கண்டுபிடித்து கொடுமாறு காவல்துறையை அணுகிய சம்பவம், காவல்துறை அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தியது.

உத்தரபிரதேசத்தின் கைரானா பகுதியை சேர்ந்தவர் அஸிம் மன்சூரி, இவரது உயரம் 2 அடி அல்லது அதற்கு மேல் இருக்கும். இவரின் உயரமே இவரது திருமணத்திற்கு ஒரு பெரிய தடையாக மாறியது. ஒவ்வொரு முறையும் திருமண வரனுக்காக அவரது வீட்டிற்கு வரும் பல குடும்பங்கள், மன்சூரியின் உயரத்தை பார்த்தபிறகு அவரை நிராகரித்து விடுகின்றனர். எனவே, தனக்கு இனி திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து Times of India வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, அஸிம் ஒரு `பொது சேவை' வடிவமாக தனக்கு ஒரு மணமகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பியதால் உதவிக்காக காவல்துறையை அணுகியுள்ளார். அஸிம் மன்சூரி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடி வருகிறார் என்று கூறப்படுகிறது. குடும்பத்தில் உள்ள ஐந்து உடன்பிறப்புகளில் இளையவரான இவர் தனது சகோதரருடன் சேர்த்து ஒப்பனை கடையையும் நடத்தி வருகிறார். தனது உயரம் காரணமாக பல அவதூறுகள் மற்றும் அவமதிப்புகளை எதிர்கொண்டதால் 5-ம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியை விட்டு விலகியுள்ளார்.

அஸீமுக்கு 21 வயதாகும்போது, அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த அவரது பெற்றோர், அஸிமுக்கு ஏற்ற மணமகளைத் தேடத் தொடங்கினர். இருப்பினும், அவரது மைத்துனரின் கூற்றுப்படி, அவர்கள் நிறைய வரன் தேடியதாகவும், ஆனால் அவரது உயரம் காரணமாக, அஸீமை அனைவரும் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. அனைத்து நிராகரிப்புகளிலும் சோர்வடைந்த அஸிம், "என்னால் இரவில் தூங்க முடியவில்லை. நான் இவ்வளவு காலமாக முயற்சித்து வருகிறேன். என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள எனக்கென ஒருவர் வேண்டாமா?" என்று வேதனையுடன் கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஷம்லி கோட்வாலி காவநிலைய எஸ்.எச்.ஓ அதிகாரி சத்பால் சிங் கூறுகையில், ``அஸிம் கடந்த புதன்கிழமை காவல் நிலையத்திற்கு வந்து மணமகனைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் எங்களால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்." எனத் தெரிவித்துள்ளார். அஸிம் இது தொடர்பாக முதலில் உதவி கேட்கத் தொடங்கியபோது அவர் சென்றது காவல்துறை அதிகாரிகளிடம் அல்ல. முதலில், அவர் லக்னோவில் உள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் தனக்கு உதவுமாறு கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து பேசிய அஸிம் " எனக்கு உதவுங்கள் என்று நான் அவரிடம் கெஞ்சினேன் " என்று கூறினார்.

பின்னர் 2019ம் ஆண்டு, திருமணம் தொடர்பாக தனது குடும்பத்தினர் தனக்கு உதவவில்லை என்று அஸிம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் அஸிம் குடும்பத்தினருடன் பேசும் வீடியோ ஒன்று வைரலாகியது. அதில் அந்த அதிகாரி கூறியதாவது, "அவரைப் பாருங்கள், அவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக உடையணிந்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று அஸிம் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு வரன் அமைந்தபாடில்லை.

எட்டு மாதங்களுக்கு முன்பு கூட, அவர் எஸ்.டி.எம் உதவியை நாடுவதற்காக கைரானா காவல் நிலையத்திற்குச் சென்றார். அதன்பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதினார். முதல்வரிடமிருந்தோ அல்லது எஸ்.டி.எம்மிடமிருந்தோ எந்த பதிலும் கிடைக்காத நிலையில், அவர் மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடமே உதவியை நாடியுள்ளார். திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் இவ்வளவு தூரம் செல்வாரா? என்பது ஆச்சர்யம் தான்.
Published by:Ram Sankar
First published: