• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கருப்பு பூஞ்சை- பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆம்போடெரிசின் பி ஊசி?

கருப்பு பூஞ்சை- பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆம்போடெரிசின் பி ஊசி?

மத்திய பிரதேசத்தில் மூன்று இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

  • Share this:
மத்திய பிரதேசத்தில் கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்போடெரிசின் பி ஊசி, பக்கவிளைவுகள் ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களில் அதிக ஸ்டீராய்டு மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருந்து வருகிறது. முன்கூட்டியே அதன் அறிகுறிகளை அறிந்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் கருப்பு பூஞ்சை தொற்றை முழுமையாக குணப்படுத்திவிடலாம். தாமதமாக எடுக்கப்படும் சிகிச்சையால் 50 சதவீதம் வரை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை எனப்படும் மியூக்கோர்மைகோசிஸ் பாதிப்புக்கு அம்போடெரிசின் பி ஊசி பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மூன்று இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு அல்லது மூன்று டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு அதிகப்படியான குளிர்ச்சி மற்றும் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தகைய பாதிப்புகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து பந்தல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் அம்போடெரிசின் பி ஊசி பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், குற்றச்சாட்டுகள் சாகர் மற்றும் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் எழுந்ததால், அங்கும் இந்த ஊசி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தூரில் உள்ள மகாராஜா யஸ்வந்திரோ மருத்துவமனையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களில் 40 சதவீதத்தினர் இத்தகைய பக்கவிளைவுகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஆம்பொடெரிசின் ஊசி செலுத்தப்பட்டிருந்ததாகவும், தற்போது அந்த ஊசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

சாகரில் உள்ள பந்தல்கண்ட் அரசு மருத்துவமனையில் 27 கருப்பு பூஞ்சை தொற்று நோயாளிகள் உள்ளனர். இத்தகைய பாதிப்புகள் குறித்து அறிந்தவுடன் மருத்துவமனை டீன், ஆம்பொடெரிசின் ஊசிக்கு தடை விதித்து, அதற்கு மாற்றாக வேறு மருந்துகள் செலுத்த அறிவுறுத்தியுள்ளார். ஜபல்பூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வரும் 126 பேரில் 60 பேரின் நிலை மோசமாகியுள்ளது. ஆம்பொடெரிசின் ஊசி செலுத்திய 10 நிமிடங்களுக்குப் பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பக்கவிளைவுகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையின் மூலம் மீண்டு வந்தவர்கள். தற்போதைய சூழலில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீதத்தினர் உயிரிழப்பை எதிர்கொள்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: