SHIV SENA AND BJP MEMBERS CREATE VIOLATIONS ON VALENTINES DAY IN BHOPAL SRS
`இது வெறும் ஆரம்பம்தான்!’ - காதலர் தினத்தன்று வன்முறையில் ஈடுபட்ட சிவசேனா, பாஜ.க?
உணவகம்
லவ் ஜிஹாத் மற்றும் ஹூக்கா பார்களை ஊக்குவிக்கும் நடைமுறைக்கு எதிராக முன்னாள் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர நாத் சிங் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து நாங்கள் களத்தில் இறங்கினோம்.
உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பல ஜோடிகளும் இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர். காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர் நாய் மற்றும் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில், போபாலில் காதலர் தினத்தன்று காதலர்கள் சென்ற உணவகம் ஒன்றிற்குள் புகுந்து உணவகத்தை ஒரு கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கியவர்களில் சிலர் தங்களை சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இதேபோன்ற வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போபால் பகுதியில் நடந்த இரண்டு சம்பவங்களையும் சேர்த்து மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன்முறை சம்பவம் தொடர்பாக பா.ஜ.க இளைஞர் அணியான பாரதிய யுவ மோர்ச்சா பிரிவின் தலைவர் அமித் ரத்தோர் இதுதொடர்பாக பேசும்போது, ``லவ் ஜிஹாத் மற்றும் ஹூக்கா பார்களை ஊக்குவிக்கும் நடைமுறைக்கு எதிராக முன்னாள் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர நாத் சிங் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து நாங்கள் களத்தில் இறங்கினோம். இதில் சில இளைஞர்கள் சொத்துகளை சேதப்படுத்துவதன் மூலம் தங்களது கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது வெறும் ஆரம்பம் தான். இவற்றை மூடாவிட்டால் இதுபோல இன்னும் பல சம்பவங்கள் நடைபெறும்” என்று எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக பேசுகையில், `இந்த வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பிறகு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர நாத் சிங் உள்ளிட்ட 17 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.