பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் காட்டு விலங்கால் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், பண்டிகை முடிந்தும் சிறுவர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களுடன் தற்போதும் பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர். தனது உறவினருடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்து கொண்டிருந்த 5 வயது சிறுவன் காட்டு விலங்கால் கொல்லப்பட்ட துயரம் ஹிமாச்சலில் அரங்கேறியிருக்கிறது.
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவின் டவுண்டேல் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் தீபாவளியன்று பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தான். தீபாவளி நாளில் இரவு 8 மணியளவில் அங்குள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவனது வீட்டு வாசலில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த காட்டு விலங்கு ஒன்று அச்சிறுவனை இழுத்துச் சென்றது.
Also read:
ஈராக் பிரதமரை கொல்ல முயற்சி…. ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்.. தேர்தல் முடிவு காரணமா?
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அங்குமிங்கும் தேடிப் பார்த்து விட்டு இது குறித்து இரவு 11 மணியளவில் வனத்துறையினரின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தெரியப்படுத்தினர். வனத்துறையினர், அவசரகால மீட்புப் படையினர் இணைந்து சிறுவனை தேடி வந்தனர். சிறுவனை இழுத்துச் சென்ற வனவிலங்கு எதுவென யாருக்கும் தெரியவில்லை. இதனிடையே சிறுவன் மாயமான மறுநாளான வெள்ளியன்று அவன் அணிந்திருந்த கால்சட்டை (ஷார்ட்ஸ்) ரத்தக்கறையுடன் அவனது வீட்டில் இழுந்து 100 அடிக்கு கீழ் கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் சிறுவனை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சனிக்கிழமையன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து, இந்நிலையில் சிறுவனின் உடல் பாகங்கள் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து சிறுவன் வனவிலங்கால் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையறிந்து அவனது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். இதனிடையே கைப்பற்றப்பட்டுள்ள சிறுவனின் உடல்பாகங்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Also read:
தொழிலதிபர் வீட்டில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரூ.2 கோடியை கொள்ளையடித்த வீட்டு வேலைக்காரர்கள்…
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே போல சிம்லாவைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் சிறுத்தையால் இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்தும், சிசிடிவி கேமராக்கள் பொறுத்தியும் அந்த சிறுத்தையை வனத்துறையினரால் பிடிக்க முடியவில்லை, தற்போது மேலும் ஒரு சிறுவன் வனவிலங்கால் கொல்லப்பட்டிருப்பதால் அந்த சிறுமியை கொலை செய்த அதே சிறுத்தையால் தான் சிறுவனம் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.