இந்திய பிரதமர் நரேந்திர
மோடியை தொலைக்காட்சி விவாததற்கு அழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் சிங்வி கண்டனம் தெரிவித்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த சசிதரூர் தனது வழக்கமான பாணியில் கிண்டல் செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு செல்லும் முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தான். இந்த பயணத்தின் ஒருபகுதியாக, ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியாக RT நியூஸுக்கு
இம்ரான் கான் அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபெற விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் சிங்வி, அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கூட எங்கள் பிரதமர் பாகிஸ்தான் பிரதமருடன் விவாதம் நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. தவறான சமநிலையை பாகிஸ்தான் விரும்புகிறது. அதனை நாம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றால், மிகப்பெரும் தீவிரவாத ஏற்றுமதி நாடான பாகிஸ்தானுக்கு ஒரு உயர்ந்த தார்மீக அடித்தளம் கிடைத்துவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கப்போகும் சர்வதேச விண்வெளி நிலையம்; எப்போது?
அதேவேளையில், சமூக ஊடங்களில் எப்போது ஆக்டிவாக செயல்படும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசீ தரூர் தனது வழக்கமான கிண்டல் பாணியில் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், யுத்தம்- யுத்தம் என்பதைவிட வாய்-வாய்( பேச்சுவார்த்தை) சிறந்தது என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்திய தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் எந்த பிரச்சனையும் தீராது. அதிகமாக தான் ஆகும். டிஆர்பிக்காக மூன்றாவது உலக யுத்தத்தையும் எங்களது நெறியாளர்கள் மகிழ்ச்சியுடன் தூண்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.