Home /News /national /

மகாராஷ்டிரா அரசியல் களேபரத்தில் மறைமுகமகக் காய் நகர்த்தும் சரத் பவார்?

மகாராஷ்டிரா அரசியல் களேபரத்தில் மறைமுகமகக் காய் நகர்த்தும் சரத் பவார்?

ரகசிய காய் நகர்த்தும் சரத் பவார்!

ரகசிய காய் நகர்த்தும் சரத் பவார்!

ஒரே நேரத்தில் 22 சட்டமன்ற உறுப்பினர்களும் சூரத்துக்குச் செல்வது கண்டிப்பாக சரத் பவாருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

    சிவ சேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசு கவிழக்கூடிய சூழலில் உள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரும் அம்மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே 21 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சூரத்தில் முகாமிட்டிருப்பது இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த 22 சட்டமன்ற உறுப்பினர்களையும் G-22 என்ற பெயரில் அரசியல் வட்டாரங்களில் அழைக்கிறார்கள். (பாஜகவிற்கு தாவும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இப்பெயரை காங்கிரஸ் வழங்கியது)
    இந்த அரசியல் சூழலுக்கு மறைமுகக் காரணமாகத் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    ஒரே நேரத்தில் இந்த  G-22, அதாவது 22 சட்டமன்ற உறுப்பினர்களும்  சூரத்துக்குச் செல்வது கண்டிப்பாக சரத் பவாருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை எனவும் சொல்லப்படுகிறது.

    மும்பை போலீஸ் முழுக்க அம்மாநில உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டிலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவருக்குத் தெரியாமல் இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே இரவில் சூரத்துக்குப் புறப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் சொல்லப்படுகிறது.

    இந்த அரசியல் களேபரங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் டெல்லியில் எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட யஷ்வந்த சின்காவை தேர்ந்தெடுக்கும் பணியில் மற்ற அரசியல் கட்சி தலைவர்களுடன் சரத் பவார் இருந்தார்.

    குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டபோது, தான் ‘முழுநேர அரசியலிலிருந்து விலகும் எண்ணமில்லை’ என அறிவித்து அந்த வாய்ப்பை மறுத்தார். அவருடைய இந்த அறிவிப்பும் தற்போது மகாராஷ்டிராவில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது

    சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இம்மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு எதிரான கூட்டணியை உருவாக்கி ஆட்சியை அமையச் செய்தது சரத் பவார்தான். சிவசேனா பாஜகவுடன் 25 ஆண்டுகள் வைத்திருந்த கூட்டணியை உடைத்ததும் அவர்தான். ஆனால் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கும் அவர் காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது எனவும், எப்போதும் கணிக்க முடியாத நகர்வுகளையே மேற்கொள்பவர் பவார் எனவும் சொல்லப்படுகிறது.

    இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இது சிவசேனாவின் உள்கட்சி பிரச்சினை எனவும், தனது ஆதரவு தற்போதுள்ள கூட்டணி ஆட்சிக்கே எனவும் தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் கோட்டையான சூரத்தில் 21 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஷிண்டே முகாமிட்டிருப்பது இன்னொரு ஆப்ரேஷன் லோட்டஸை அக்கட்சி மகாராஷ்டிராவில் அரங்கேற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவ சேனா ஆட்சி கவிழ்ந்தாலும், காப்பாற்றப்பட்டாலும் சரத் பவார் மகாராஷ்டிரா அரசாங்கத்தை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த கிங் மேக்கராகவே இருப்பார் என்பது தெளிவு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: BJP, Maharashtra, Uddhav Thackeray

    அடுத்த செய்தி