மன்னிப்பு கேட்க மறுக்கும் பிரிட்டன்! ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நூறாண்டு நினைவுகள்

இந்தப் படுகொலை நிகழ்ந்து ஒரு மாதம் கடந்தபிறகே, இந்த கொடூரச் சம்பவம் உலகுக்கு தெரியவந்தது.

news18
Updated: April 13, 2019, 11:22 PM IST
மன்னிப்பு கேட்க மறுக்கும் பிரிட்டன்! ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நூறாண்டு நினைவுகள்
ஜாலியன்வாலா பாக் நினைவிடம்
news18
Updated: April 13, 2019, 11:22 PM IST
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து சில கி.மீ தொலைவிலுள்ள ஜாலியன்வாலா பாக் எனும் பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற்ற மனித தன்மையற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 100-ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

ஆங்கிலேய அரசு கொண்டு வந்த ரௌலட் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாலியன்வாலா பாக் எனும் பகுதியில் மக்கள் அமைதியான முறையில் கூடினர். அவர்கள் மீது, இரக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர்.

அவர், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட இடத்தில் கூடியிருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 10,000 தாண்டும். அவர்கள், அனைவரும் எந்த ஆயுதமும் இன்றி அமைதியான முறையில் போராட்டம் நடத்த அங்கே கூடியிருந்தவர்கள். அந்த துப்பாக்கிச் சூட்டில், 379 பேர் உயிரிழந்ததாக ஆங்கிலேய அரசு அறிக்கை தெரிவித்தது.

சுயாதீன அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்தியர்களின் போராட்டதில் நிகழ்ந்த மிகப் பெரிய உயிரிழப்பாக இந்தச் சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இந்தச் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சமயம், ராணுவச் சட்டம் அமலில் இருந்தது. அதனால், இந்தப் படுகொலை குறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியிட முடியாத சூழல். இந்தப் படுகொலை நிகழ்ந்து ஒரு மாதம் கடந்தபிறகே, இந்த கொடூரச் சம்பவம் உலகுக்கு தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தை சில வாரங்கள் கழித்தே காந்தி அறிந்துகொள்ள முடிந்தது. ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பிறகே, காந்தியின் தேச விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்தது என்று கூறுவார்கள். காந்தியின் விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, இந்தியர்களின் விடுதலைப் போராட்டமும் அதன்பிறகே, தீவிரமடைந்தது.

இந்த சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை நீடித்து வருகிறது. ஆனால், இந்தச் சம்வத்துக்கு பிரிட்டிஷ் அரசு இதுவரை மன்னிப்பு கோரவில்லை என்பது நம்முன்னே நீடிக்கும் பெருந்துயரம்.

ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்வுக்கு பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீண்ட காலமாக இந்தியத் தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், அந்தக் கோரிக்கை இன்றுவரை பிரிட்டன் ஆட்சியாளர்கள் செவிகளை எட்டவில்லை.

1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வந்திருந்த இங்கிலாந்து ராணி, ஜாலியன்வாலா பாக் நினைவிடத்துக்கு வந்திருந்தார். அப்போது, இந்த நிகழ்வு குறித்து பேசிய அவரது கணவர் பிலிப் ஸ்டோலியின், ’ஜாலியன்வாலா பாக் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இந்தியர்கள் மிகைப்படுத்துகிறார்கள்’ என்று தெரிவித்தார். இது மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2013-ம் ஆண்டு, ஜாலியன்வாலா பாக் நினைவிடத்துக்கு வருகை தந்த அப்போதைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ‘படுகொலை நிகழ்வு மிகவும் அவமானகரமானது’ என்று தெரிவித்தார். ஆனால், அவரும் மன்னிப்பு கோரவில்லை.

பின்னர், ’இந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை நாம் மறக்கக் கூடாது. உலகம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு பிரிட்டன் உறுதுணையாக இருக்கும் என்பதை நாம் உறுதி செய்யவேண்டும்’ என்று பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதினார். அதிலும், மன்னிப்பு கோரவில்லை.

கடந்த புதன்கிழமை, பிரிட்டம் நாடாளுமன்றத்தில் பேசிய தற்போதைய பிரதமர் தெரசா மே, ‘ஜாலியன்வாலா பாக்கில் நடைபெற்ற நிகழ்வு மிகவும் வருந்தத்தக்கது. மிகவும் துன்புறச் செய்கிறது’ என்றார். ஆனால், அவரும் மன்னிப்பு கோரவில்லை.

Also see:

First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...