முகப்பு /செய்தி /இந்தியா / “நீதியின் மீதான நம்பிக்கை அசைந்தது.. நான் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன்” - பில்கிஸ் பானோ கண்ணீர்

“நீதியின் மீதான நம்பிக்கை அசைந்தது.. நான் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன்” - பில்கிஸ் பானோ கண்ணீர்

பில்கிஸ் பானோ

பில்கிஸ் பானோ

Bilkis Bano Case : குஜராத் அரசுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான் தயவு செய்து இந்த கொடுமையை நீக்குங்கள். அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான எனது உரிமையை திருப்பித்தாருங்கள். - பில்கிஸ் பானோ

  • Last Updated :
  • Gujarat, India

பிப்ரவரி 27, 2002 கோத்ராவில் இருந்து அயோத்திக்கு திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள் உட்பட 57பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்துக்கு இஸ்லாமியர்களின் சதிவேலையே காரணம் எனக் கூறி இந்து அமைப்பினர் குஜராத்தில் தாக்குதல்களை தொடங்கினர். இரண்டு வாரங்கள் தொடர்ந்த அந்த தாக்குதலின் துயரங்கள் சொல்லில் அடங்காதவை. அந்த கலவரத்தின் கோர முகத்தின் சாட்சியாக நிற்கிறார் பில்கிஸ் பானோ.

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு இடையில் இவரது பெயர் ஒலித்துக்கொண்டிருந்தது. நான் இப்போது உணர்ச்சியற்றவளாக நிற்கிறேன் என கண்ணீர் வடிக்கிறார் பில்கிஸ் பானோ. குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவுக்கு 19 வயது. அவருக்கு திருமணமாகி 3-வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து 5 மாதங்கள் ஆகி இருந்தது. பக்ரீத் பண்டிகைக்காக தாய் வீட்டுக்கு வந்திருந்தார். கோத்ராவுக்கு மிக அருகில் தான் அந்த கிராமம் இருந்தது.

20 வருடங்களுக்கு முன் நடந்த கொடூரம் குறித்து பில்கிஸ் பானோ கூறுகையில், “நான் சமையலறையில் இருந்தேன். மதிய உணவு தயார் செய்துக்கொண்டிருந்தேன். என்னுடைய அத்தை அவரது குழந்தைகளுடன் ஓடி வந்தார். வீட்டிற்கு தீ வைத்து விட்டார்கள் நாம் உடனே இங்கிருந்து புறப்பட வேண்டும் என்றார். நாங்கள் அணிந்திருந்த ஆடையோடு புறப்பட்டோம். எங்களுக்கு செருப்பு போடக்கூட நேரமில்லை.

 கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல்:

சில நிமிடங்களில் அங்கிருந்த இஸ்லாமிய குடும்பங்கள் அனைத்து காலியாகின. அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கினர். முதலில் நாங்கள் கிராமத்தில் உள்ள தலைவரை சந்தித்து அவரிடம் பாதுகாப்பு கேட்டு சென்றோம். அவர் ஒரு இந்து. இஸ்மியர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் உன்னையும் கொன்றுவிடுவோம் என சிலர் அவரை மிரட்டியதால் நாங்கள் அங்கிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இரக்கமற்ற கூட்டத்தின் கொடூர தாக்குதல்:

அடுத்த நான்கு நாள்கள் கிராமம் கிராமமாக பயணித்தோம். மசூதிகளிலும், இந்து நண்பர்களின் இல்லங்களிலும் தஞ்சம் அடைந்தோம். மார்ச் 3-ம் தேதியோடு எங்களின் நல்ல நேரம் முடிந்தது. பக்கத்து கிராமத்துக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என கிளம்பினோம். திடீரென இரண்டு ஜீப்களில் வந்த நபர்கள் எங்களை தடுத்து நிறுத்தினர். குச்சியிலும், கத்தியாலும் எங்களை தாக்கத்தொடங்கினர். அதில் ஒருவன் மடியில் இருந்த என் மகளை பிடிங்கி தூக்கி நிலத்தில் வீசினான் அதில் அவள் தலையில் காயம்பட்டு உயிரிழந்தாள் என கண்ணீர் வடிக்கிறார்.

Also Read:  நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கு: 11 குற்றவாளிகளையும் விடுவித்த குஜராத் அரசு - வலுக்கும் எதிர்ப்பு

இரக்கமற்ற அந்த கூட்டம் அவர்களை கடுமையாக தாக்கத் தொடங்கியது. பில்கிஸ் பானோ உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த பல பெண்களை அந்த கும்பல் நாசமாக்கியது. பில்கிஸ் ஆடைகளை கிழித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். தான் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறேன் என அவர்களிடம் மன்றாடியுள்ளார். அந்த இரக்கமற்ற கூட்டத்தின் செவிகளுக்கு அந்த அப்பாவி பெண்ணின் கதறல் கேட்கவில்லை. அவளது உறவுக்கார பெண்ணுக்கு இரண்டு நாளுக்கு முன் தான் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை தூக்கிக் கொண்டு அந்தப் பெண் தப்பித்து ஓட முயல அவரது குழந்தையை கொன்று அந்தப்பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானோ மயக்கமடைந்துள்ளார். அவர் இறந்துவிட்டார் என நினைத்து அந்தக்கும்பல் அவரை விட்டுவிட்டு சென்றுள்ளது. மயக்க தெளிந்தபின்னர் அருகில் இருந்த மலைப்பகுதிக்கு சென்று ஒளிந்துக்கொண்டார். அடுத்தநாள் தண்ணீர் குடிப்பதற்காக பக்கத்துக்கு கிராமத்துக்கு சென்றுள்ளார். அந்த கிராமத்தினர் தான் அவருக்கு உதவியுள்ளனர்.

அடைக்கலம் கொடுத்த கிராம மக்கள்:

இதுகுறித்து பில்கிஸ் பானோ தெரிவிக்கும்போது, “அடுத்த நாள் எனக்கு தாகம் ஏற்பட்டதால் அருகில் உள்ள பழங்குடியின கிராமத்துக்கு சென்று தண்ணீர் தேடினேன். முதலில் அவர்களுக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு என்னை தாக்க வந்தனர். பின்னர் என் நிலை அறிந்து அவர்களே எனக்கு உதவி புரிந்தனர். எனக்கு ஆடைகளை கொடுத்து என் உடலை மறைத்து மானம் காத்தனர்.

அதன்பின்னர் காவலர்கள் வந்து ஜீப்பில் என்னை காவல் நிலையம் அழைத்து சென்றனர். நான் பள்ளி சென்று படிக்கவில்லை. எனக்கு எழுத தெரியாது என்பதால் நான் சொல்வதை எழுதுமாறு காவலர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் நான் சொல்வதை கேட்க தயாராக இல்லை. அவர்கள் என்னுடைய கைரேகையை பதிவு செய்து அவர்கள் இஷ்டத்துக்கு எழுதவே தயாராக இருந்தனர். என்னை தாக்கியவர்கள் அடையாளம் எனக்கு தெரியும். அவர்களின் பெயர்களை நான் கூறினேன். ஆனால் போலீஸ் அந்த பெயர்களை எழுத மறுத்துவிட்டனர். என்றார்

அடுத்த நாள் அவர் கோத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகாம் அனுப்பப்பட்டுள்ளார். அங்கு தான் 15 நாள்களுக்கு பிறகு தனது கணவரை சந்தித்துள்ளார். அந்த கொடூர சம்பவத்திலும் வயிற்றில் இருந்த 5 மாத சிசு உயிர்பிழைத்தது. அடுத்த சில மாதங்களில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தார். ஆரம்பத்தில் இவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வரத்தொடங்கியுள்ளது. அவரது குடும்பத்தினர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்டது. சாட்சியங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளும் நடந்துள்ளது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என்றெல்லாம் அறிக்கை கொடுத்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டப்போராட்டம் ;

இதன்பின்னர் உச்சநீதிமன்ற படி ஏறினார் பில்கிஸ் பானோ. குஜராத் நீதிமன்றங்கள் தனக்கு நீதி வழங்காது என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றியது. அதைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், 2008 -ம் ஆண்டு மும்பையிலுள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றம், 11 குற்றவாளிகளுக்குப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனுவையும் மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதிசெய்திருந்தது.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த குற்றவாளிகளில் ஒருவர் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 432, 433-ன் கீழ் தண்டனையை ரத்துசெய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த குற்றவாளியின் தண்டனையை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு, குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அவரை விடுதலை செய்யலாம் என கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய பரீசிலிக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெறிமுறைகளை அனுப்பியிருந்தது. ஆனால் இதில் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுவிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தடையை மீறி குஜராத் அரசுபில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தினர் 7 பேரையும் கொன்ற 11 குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது.

Also Read: பெண்ணின் ஆடை பாலியல் உணர்வை தூண்டுவதாக இருக்கிறது - பாலியல் வழக்கில் கேரள நீதிமன்றம் தெரிவித்த கருத்தால் சர்ச்சை

இந்த செய்தி பில்கிஸ் பானுவின் நம்பிக்கை உடைத்தது. என் குடும்பத்தையும், என் வாழ்க்கையையும் சீரழித்து 3-வயது மகளை பிரித்த 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியை நான் கேட்டதும் கடந்த 20 ஆண்டுகால அதிர்ச்சி என்னை மீண்டும் கவ்வியது. இன்றைக்கு இதைமட்டும் தான் சொல்ல முடியும். எந்த பெண்ணுக்கு இப்படியான நீதி இறுதியில் கிடைக்கும். நாட்டில் உள்ள நீதிமன்றங்களை நம்பினேன். நான் இந்த அமைப்பை நம்பினேன். என் அதிர்ச்சியுடன் நான் வாழ மெதுவாக கற்றுக்கொண்டேன். இந்த குற்றவாளிகளின் விடுதலை என்னிடம் இருந்த அமைதியை பறித்துவிட்டது. என் துயரமும், எனது நம்பிக்கையும் நீதிமன்றங்களில் நீதிக்காக போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கானது.

top videos

    குஜராத் அரசுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான் தயவு செய்து இந்த கொடுமையை நீக்குங்கள். அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான எனது உரிமையை திருப்பித்தாருங்கள். நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

    First published:

    Tags: Gujarat attacks, India, Sexual harassment