முகப்பு /செய்தி /இந்தியா / 5 ஆண்டுகளில் குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்த 7.5 லட்சம் இந்தியர்கள் - அரசு தகவல்

5 ஆண்டுகளில் குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்த 7.5 லட்சம் இந்தியர்கள் - அரசு தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் குடியுரிமையை துறந்த இந்தியர்களில் 82 சதவீதம் பேர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய மக்களின் குடியுரிமை விவரங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் சமர்ப்பித்துள்ளது. அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் எத்தனை பேர் தங்களின் குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர், எத்தனை வெளிநாட்டினர் இந்திய குடியுரிமையை கோரி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2016 முதல் 2021 ஆகிய காலக்கட்டத்தில், 7 லட்சத்து 49 ஆயிரத்து 765 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, 2016ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 603 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 49 இந்தியர்களும், 2018ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 561 இந்தியர்களும், 2019ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 17 இந்தியர்களும் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.

பெருந்தொற்று நிகழ்ந்த 2020ஆம் ஆண்டில் தான் குறைவாக 85 ஆயிரத்து 248 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்தாண்டில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 287 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் குடியுரிமையை துறந்த இந்தியர்களில் 82 சதவீதம் பேர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். 2017ஆம் ஆண்டுக்குப் பின் சுமார் 2.56 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்து அமெரிக்கா குடியேறியுள்ளனர். அடுத்தாக கனடாவுக்கு சுமார் 91 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையை துறந்து குடிபெயர்ந்துள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில், 31 இந்தியர்கள் பாகிஸ்தானுக்காக தங்கள் குடியுரிமையை துறந்ததாக அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சீனாவிற்காக 2,174 இந்தியர்களும், இலங்கைக்காக 94 இந்தியர்களும் குடியுரிமையை துறந்துள்ளனர். அதேபோல், இந்த காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்திய குடியுரிமை பெற்றவர்களின் புள்ளிவிவரமும் வெளியாகியுள்ளது. அதன்படி, 2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை 5,891 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 47 லட்சம் பேர் பலி- பீதியைக் கிளப்பிய WHO- மறுத்த மத்திய அரசு

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த இந்து, சீக்கியர், ஜைன் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மையினர் 3,117 பேர் இதில் அடக்கம். 2021ஆம் ஆண்டு டிசம்பரின் படி 10,635 பேர் இந்திய குடியுரிமை கோரிய விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. இதில் 7,306 பாகிஸ்தானில் இருந்தும், 1,152 ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்துள்ளன.

First published: