கேரளாவில் 3 பாஜக வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு!

பாஜக வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு!

தலசேரியை பொருத்தவரை பாஜக அதிக வாக்குகளை பெற்ற தொகுதியாக விளங்குகிறது. இங்கு 2016 தேர்தலில் போட்டியிட்ட சஜீவன் 22,125 வாக்குகளை பெற்றார்.

  • Share this:
கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் மூவரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தலசேரி உள்ளிட்ட 3 தொகுதியிலும் வேட்பாளர் இல்லாத நிலைமைக்கு பாஜக கூட்டணி தள்ளப்பட்டு இருக்கிறது.

தலசேரி, குருவாயூர் மற்றும் தேவிகுளம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி தொகுதியில் பாஜக வேட்பாளராக மாவட்ட பாஜக தலைவர் ஹரிதாஸ் களமிறக்கப்பட்டார். ஹரிதாஸின் வேட்பு மனுவில் தேசிய பாஜக தலைவரின் கையெழுத்து இல்லை என்பதற்காக அவருடைய வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். தலசேரியை பொருத்தவரை பாஜக அதிக வாக்குகளை பெற்ற தொகுதியாக விளங்குகிறது. இங்கு 2016 தேர்தலில் போட்டியிட்ட சஜீவன் 22,125 வாக்குகளை பெற்றார். இங்கு டம்மி வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதால் தலசேரியில் பாஜக போட்டியில் இருந்து பின்வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருச்சூர் மாவட்டம் குருவாயூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறக்கப்பட்டவர் மாநில மகளிர் அணி தலைவியான நிவேதிதா. வழக்கறிஞரான இவரின் வேட்பு மனுவில் மாநில தலைவரின் பெயர் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற காரணத்திற்காக தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் டம்மி வேட்பாளர் களமிறக்கப்படவில்லை என்பதால் இங்கும் போட்டி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தேவிகுளம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த ஆர்.தனலட்சுமி என்பவர் களமிறக்கப்பட்டார். இவருடைய வேட்பு மனுவில் பாரம் எண் 26 சரியான முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் முரண்கள் இருப்பதாகவும் கூறி தேர்தல் அதிகாரி தனலட்சுமியின் வேட்பு மனுவை நிராகரித்தார். தனலட்சுமி கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 11,613 வாக்குகளை பெற்றார். தேவிகுளம் தொகுதியிலும் டம்மி வேட்பாளரின் வேட்பு மனு முன்னதாகவே நிராகரிக்கப்பட்டு விட்டது.

இதன் மூலம் 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் இல்லாமல் சட்டமன்ற தேர்தலை பாஜக எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. மாநிலத்தில் புதிய சக்தியாக உருவெடுக்கும் நோக்கில் களமிறங்கியிருக்கும் அக்கட்சிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மொத்தம் 2,138 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுவை திரும்பப்பெருவதற்கான கடைசி தேதி மார்ச் 22. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
Published by:Arun
First published: