3 கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்ததால் பட்டினிச் சாவுகள்; இது மிகவும் சீரியஸான விவகாரம்- உச்ச நீதிமன்றம்

3 கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்ததால் பட்டினிச் சாவுகள்; இது மிகவும் சீரியஸான விவகாரம்- உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உணவுக்கான உரிமை விழிப்புணர்வின் பட்டினிக் கண்காணிப்பு அறிக்கையில் இந்தியாவில் பட்டினி நிலவரம் மோசமாக உள்ளது என்றும் உலக பட்டினிக் குறியீடு, 2020-ன் படி 107 நாடுகளில் இந்தியா 94ம் இடத்தில் ‘சீரியஸ் பட்டினிப் பிரிவு நாடுகளில்’ உள்ளது

  • Share this:
    நாட்டின் பழங்குடி மக்கள், மற்றும் ஏழைகள் உட்பட, ஆதாருடன் பயோமெட்ரிக் முறையில் இணைக்கப்பட முடியாததால் 3 கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு நீக்கியிருந்தால் இது மிகவும் ‘சீரியஸான விவகாரம்’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மத்திய அரசு முன்னமொரு முறை இது தொடர்பாகக் கூறும்போது மரணங்கள் பட்டினியினால் அல்ல வறுமை காரணமல்ல என்று தெரிவித்திருந்தது. அதாவது 3 கோடி ரேஷன் கார்டுகளை நீக்கி விட்டதால் குடும்பங்கள் வறுமையில் மரணமடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு இவ்வாறு பதிலளித்தது.

    இந்நிலையில் கொய்லி தேவி என்பாரால் மேற்கொள்ளப்பட்ட மனு தொடர்பான விசாரனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன் நடந்தது, மனுதாரார் கொய்லி தேவியை பிரதிநிதித்துவப் படுத்திய வழக்கறிஞர் கொலின் கொன்சால்வெஸ் ஆவார்.

    அதாவது 3 கோடி ரேஷன் அட்டைகளை நீக்கியதால், ரத்து செய்ததால் பட்டினிச்சாவுகள் அதிகரித்ததாகக் கோரி இந்த மனு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

    இது தொடர்பாக ‘3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருந்தால் அது மிகவும் சீரியஸான விவகாரம்’ என்று உச்ச நீதிமன்றம் அச்சம் வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக மனுதாரர் மேற்கொண்ட மனுவில், “ஆதார் அட்டை, பயோமெட்ரிக் அடையாள நிர்ணய உறுதியை இணைக்க வலியுறுத்தியதால் சுமார் 4 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ள என்று மத்திய அரசுதான் கூறியது. ஆனால் மத்திய அரசோ மிகவும் சாதாரணமாக இவை எல்லாம் போலி ரேஷன் கார்டுகள் என்று கூறியது. ஆனால் உண்மையான காரணம் என்னவெனில் ஆதார் இன்மை, கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் இண்டெர்நெட் இல்லாதது போன்ற சிக்கல்களால் இவ்வளவு ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தந்தக் குடும்பங்களுக்கு இது பற்றி நோட்டீஸ் கூட அனுப்பவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மனுதாரரை பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞர் கொன்சால்வேஸ் ஆங்கில நாளேடு ஒன்றுக்குக் கூறும்போது, “2 கோடி முதல் 4 கோடி ரேஷன் அட்டைகள் பயனாளர்களுக்கு முன் கூட்டியெ நோட்டீஸ் அனுப்பாமல் நீக்கப்பட்டுள்ளது. இதை வைத்துதான் மனு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    உணவுக்கான உரிமை என்பதை குறியீடாக உணர்த்தும் ரேஷன் அட்டைகளை ஆதார் இல்லை என்பதற்காக நீக்க முடியாது, ரத்து செய்ய முடியாது, என்கிறார் அவர்.



    விசாரணை கோரப்படுகிறது:

    மனுதாரர் கொயிலி தேவியின் 11வயது மகள் சந்தோஷி குமாரி இந்த ரேஷன் அட்டை ரத்து நடவடிக்கையினால் ஜார்கண்டில் பட்டினிச்சாவு அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆதாருடன் ரேஷன் அட்டையை இணைக்கவில்லை என்று தன் ரேஷன் அட்டையை ரத்து செய்திருக்கிறார்கள் என்கிறார் கொயிலி தேவி.

    இந்நிலையில் கொன்சால்வேஸ் கூறும்போது, ‘அரசு தொடர்ந்து ஆதாரை வலியுறுத்துவது துரதிர்ஷ்டமே. சட்ட ரீதியான உரிமைகளைப் பெறுவதற்காக ஆதார் அட்டையை வலியுறுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. பழங்குடி மக்கள் ஒன்று ஆதார் வைத்திருக்க மாட்டார்கள், அல்லது அடையாளம் பழங்குடி மற்றும் ஊரகப்பகுதிகளில் வேலை செய்யாமல் இருந்திருக்கும். ஆதார் அட்டை இல்லை என்பதற்காக 3 கோடி ரேஷன் அட்டைகள் காணாமல் போயுள்ளது, ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா’ என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு நீதிபதி, “3 கோடி ரேஷன் அட்டைகள் போய்விட்டனவா?” என்றார்.

    இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் கொன்சால்வேஸ், “ஆமாம்! பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளன. 3 கோடி ரேஷன் அட்டைகள் காணாமல் போய் விட்டன, இந்திய ஒன்றியத்தின் அறிவிப்பை நான் காட்ட முடியும். இந்த அறிவிப்பு நம் பிரதமருடையது” என்றார்

    மேலும் அவர் கூறும்போது, மாநிலங்கள் இந்த மரணங்களை மூடி மறைத்து வயிற்றுப்போக்கு, மலேரியா என்று கூறுகின்றன, ஆனால் உண்மை என்னவெனில் உணவின்மைதான் மரணத்துக்குக் காரணம். ஆதார், பயோமெட்ரிக் போன்ற கொடூரமான நடைமுறைகளால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்களை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது. இதனால் ஜார்கண்டு, உத்தரப்பிரதெசம், ஒடிசா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், சத்திஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் பட்டினிச்சாவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது, என்றார்

    இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமான் லேக்கி, மனுதாரர் இங்கு வந்திருக்கக் கூடாது, ரேஷன் கார்டு வழங்குவதறு ஆதார் தேவை இல்லை. மேலும் மாநில அரசுகளிடம்தான் ரேஷன் அட்டை பொறுப்பு உள்ளது. ஆகவே மனுதாரர் குறிப்பிட்ட உயர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறைதீர்ப்பு மையத்திடம் இதைக் கொண்டு சென்றிருக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருக்கக் கூடாது என்றார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “நாங்கள் இந்த வழக்கை பரிசீலிக்க தலைப்படுகிறோம். ஏனெனில் மனுதாரர் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன, ரத்து செய்யப்பட்டுள்ளன என்று புகார் வைத்துள்ளார், இது மிகவும் சீரியசான விவகாரம்” என்றார்கள்.

    உணவுப்பாதுகாப்புச் சட்ட குறைதீர்ப்பு அமைப்பை நாட முடியாது ஏனெனில் ஒரு மாநிலம் கூட அதில் தனித்த அதிகாரிகளை நியமிக்கவில்லை என்கிறார் மனுதாரர்.

    அனைத்து மாநிலங்களுமே ஏற்கெனவே இருக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கியுள்ளனரே தவிர தனியாக நியமிக்கவில்லை, கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்ட இந்த அதிகாரிகளும் உணவு விநியோகத் துறையைச் சார்ந்தவர்கள். உணவு விநியோக முறையில் பெரிய ஊழல்வாதிகளே இந்த அதிகாரிகள்தான் என்று மனுதாரர் அறிக்கை கூறுகிறது.

    உணவுக்கான உரிமை விழிப்புணர்வின் பட்டினிக் கண்காணிப்பு அறிக்கையில் இந்தியாவில் பட்டினி நிலவரம் மோசமாக உள்ளது என்றும் உலக பட்டினிக் குறியீடு, 2020-ன் படி 107 நாடுகளில் இந்தியா 94ம் இடத்தில் ‘சீரியஸ் பட்டினிப் பிரிவு நாடுகளில்’ உள்ளது.

    இந்நிலையில்தான் போலி ரேஷன் அட்டைகளை ரத்து செய்து தூய்மைப்படுத்தியதாக மத்திய அரசு 3 கோடி ரேஷன் அட்டைகளை நீக்கம் செய்தது தற்போது ‘பட்டினி சாவுகளுக்குக் காரணம்’ என்று உருவெடுத்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: